×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

  1. ப்ரமோதனாய நமஹ(Pramodhanaaya namaha)

ஆயர்ப்பாடியில் கோமதி என்றொரு கோபிகை வாழ்ந்து வந்தாள். அவளிடம் ஒரே ஒரு பசுமாடுதான் இருந்ததாம். அந்தப் பசுமாட்டுக்கு அவள் தினந்தோறும் புண்ணாக்கு, வைக்கோல் ஆகிய அனைத்தும் அளித்தாலும், அது சரியாகவே பால் சுரக்கவில்லை. எத்தனையோ கால்நடை மருத்துவர்களின் உதவியை நாடியும் மாடு பால் கறப்பதாகவே தெரியவில்லை. ஒருநாள், தங்கள் குலகுருவான கர்காச்சாரியாரை வணங்கச் சென்றாள் கோமதி. அவரிடம் தன் நிலையைச் சொல்லி பசு, பால் கறப்பதற்கு ஏதேனும் ஆலோசனை சொல்லுமாறு வேண்டினாள். அதற்கு கர்காச்சாரியார், நம் யசோதையின் மகன் கண்ணன் இருக்கிறானே, அவனுக்கு எதிரே கொஞ்ச நேரம் உன் மாட்டை நிறுத்தி வை. அதன்பின் நடப்பதைப் பார் என்று ஆலோசனை வழங்கினார்.

அடடா, கண்ணனா, அவன் இருக்கும் பாலையும் வெண்ணெயையுமே திருடிச் சென்று விடுவானே, மாட்டை வேறு அவன் எதிரே கொண்டுபோய் நிறுத்துவதா என்று சற்றே யோசித்தாள், கோமதி. இருந்தாலும், குருவின் வார்த்தையில் அர்த்தம் இருக்கும் என்ற நம்பிக்கையில் யசோதையின் வீட்டு வாசலுக்குச் சென்றாள்.கண்ணனை வெளியே அழைத்தாள். கண்ணனின் பார்வை தனது பசுவின் மீது படும்படி அதை நிறுத்தினாள். திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் என்று ஆண்டாள் பாடியபடி, கண்ணனும் தனது இரு கண் களாலும் அந்தப் பசுவை ஆசையுடன் நோக்கினான். சரி, கண்ணனின் பார்வை பட்டுவிட்டது.

இனி மாட்டை வீட்டுக்கு அழைத்துச் செல்வோம் என்று இழுத்தாள் கோமதி. பசுமாடு அவளுடன் வர மறுத்துவிட்டது. கண்ணனின் கண்ணெதிரிலேயே இருக்க விரும்பியது அந்த மாடு. மிகுந்த போராட்டத்துக்குப் பின் எப்படியோ அந்த மாட்டை வீடு வரை ஓட்டிச் சென்று மாட்டுத் தொழுவத்தில் கட்டினாள் கோமதி.

மறுநாள் காலை எழுந்தாள் கோமதி. மாட்டைக் கறக்கத் தொடங்கினாள். பார்த்தால் இருபத்தைந்து லிட்டருக்கும் மேல் பால் கறந்தது அந்த மாடு. கோமதிக்கு ஒரே சந்தோஷம். வீட்டுத் தேவைகளுக்கு ஒரு லிட்டர் பாலை மட்டும் உபயோகித்து விட்டு, மீதமுள்ள பாலில் தயிரை விட்டு உறைகுத்தி வைத்தாள். அடுத்த நாள் காலையில் பார்த்த போது, இருபத்தைந்து லிட்டர் தயிர் அப்பாத்திரத்தில் இருந்ததாம். நாம் கொஞ்சம் பாலை எடுத்துப் பயன்படுத்திய பின்னும் எப்படி 25 லிட்டர் தயிர் கிடைத்தது என்று வியந்தாள் கோமதி.

அடுத்து தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த போது, 25 லிட்டர் தயிரிலிருந்து 25 லிட்டர் வெண்ணெய் கிடைத்தது. இது இன்னும் கோமதியை வியப்பில் ஆழ்த்தியது. 25 லிட்டர் வெண்ணெயைக் காய்ச்சிய போது, அதிலிருந்து 25 லிட்டர் நெய்யும் கிடைத்தது.வியப்பின் உச்சத்தை அடைந்த கோமதி, 5 லிட்டர் நெய்யை எடுத்துக் கொண்டு கர்காச்சாரியாரின் ஆசிரமத்துக்குச் சென்றாள். உங்கள் ஹோமத்துக்குப் பயன்படுத்தக் காணிக்கையாக இந்த நெய்யைக் கொண்டு வந்தேன் என்றாள். உன் மாடுதான் பாலே கறப்பதில்லையே, உனக்கு ஏது இவ்வளவு நெய் என்று கேட்டார் கர்காச்சாரியார்.

சுவாமி, நீங்கள் சொன்னபடி மாட்டைக் கண்ணன் முன்னே நிறுத்தினேன். அதன்பின் மாடு ஒருநாளைக்கு 25 லிட்டர் பால் கறக்கிறது. அதைத் தோய்த்தால் 25 லிட்டர் தயிரும், அதைக் கடைந்தால் 25 லிட்டர் வெண்ணெயும், அதைக் காய்ச்சினால் 25 லிட்டர் நெய்யும் கிடைக்கின்றன. எல்லாம் உங்கள் மகிமை என்றாள்.

அதற்கு கர்காச்சாரியார், எல்லாம் கண்ணனின் மகிமை. கண்ணனின் திருமேனியைத் தரிசிக்கும்போது உள்ளார்ந்த பேரானந்தம் பார்ப்பவர்க்கு ஏற்படும். நமது கஷ்டங்களைப் போக்கிப் பேரானந்தத்தைத் தரவல்லது அவனது திருமேனி. கண்ணனின் திருமேனியைச் சேவித்ததால் உன் மாடு மிகவும் மகிழ்ந்து விட்டது. மாட்டின் மனம் மகிழ்ந்தால் பால் நிறைய சுரக்கும். உண்மையான மனமகிழ்ச்சி என்பதில் இறை அனுபவத்தில்தான் கிடைக்கும் என்று விளக்கினார்.

அதன்படி கோமதி தனது பசுவைத் தினந்தோறும் கண்ணன் முன்னே நிறுத்த, நாளுக்கு நாள் கறவை மாடான அது, கன்றுக்குட்டி போல் இளமையாகிக் கொண்டே போனதாம். ஆண்டாளும் திருப்பாவையில் கற்றுக்கறவை – கன்றுபோல் இளமையாக இருக்கும் கறவை என்று சொன்னது இங்கே நோக்கத்தக்கது.

இப்படி ஆன்மீகப் பேரானந்தத்தைத் தந்து அடியார்களை மகிழ்விப்பதால், திருமால் ப்ரமோதன என்று அழைக்கப்படுகிறார். ப்ரமோதன என்றால் அடியார்களை மகிழ்விப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 528-வது திருநாமம்.

“ப்ரமோதனாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்நாளும் திருநாளாக மகிழ்ச்சியுடன் விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

  1. ஆனந்தாய நமஹ(Aanandaya Namaha)

(529 – 538 – கபில அவதாரம்)

உலகம் படைக்கப்பட்ட காலத்தில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு, பிரம்மாவாலே நியமிக்கப் பட்டவர்கள் பிரஜாபதிகள் ஆவர். அந்தப் பிரஜாபதிகளுள் முக்கியமானவர் கர்தமப் பிரஜாபதி. அவர் பிரம்மாவிடம், தருமத்துக்காகப் பிள்ளைகளைப் பெறுவது உயர்ந்ததா, அதைவிட உயர்ந்த ஆனந்தம் வேறேதும் உண்டா என்று வினவினார். அதற்குப் பிரம்மா, கர்தமா, என்னை நாராயணன் தன் உந்தித் தாமரையில் படைத்தார்.

எனக்கு வேதங்களை உபதேசித்தார். அந்த வேதங்களுள் ஒரு பகுதியாக ஆனந்தவல்லி என்ற பகுதி வருகிறது. அப்பகுதி ஆனந்தத்தின் அளவுகோல்களை விளக்குகிறது. நல்லவனாக, கற்றவனாக, ஆசீர்வதிக்கப்பட்டவனாக, மன உறுதிமிக்கவனாக, உடல்வலிமை மிக்கவனாக, உலகமே கொண்டாடும்படியாக இருக்கும் ஓர் இளைஞனின் ஆனந்தம் ஓர் அலகு மனித ஆனந்தம் ஆகும்.

அதைப் போல், நூறு மடங்கு மனித கந்தர்வர்களின் ஆனந்தம்.
அதைப்போல் நூறு மடங்கு தேவ கந்தர்வர்களின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு பித்ருக்களின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு தேவர்களின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு தேவர்களின் தலைவனான இந்திரனின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு தேவ குருவான பிருஹஸ்பதியின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு பிரம்மாவின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு நாராயணனின் ஆனந்தம்.
இது வேதம் காட்டிய அளவு.

அதாவது, திருமாலின் ஆனந்தம் இவ்வளவுதான் என்று நம்மால் கணக்கிடவே முடியாது என்பதையே வேதம் இவ்வாறு தெரிவிக்கிறது. அவர் ஆனந்தமே வடிவெடுத்தவர். எனவே அவர்தான் உயர்ந்த ஆனந்தம் என்று விளக்கினார் பிரம்மா. அப்படியானால் இல்லற வாழ்வில் நாம் ஈடுபட வேண்டாம். பகவானையே தியானித்துக் கொண்டு வாழ்ந்து விடுவோம் என்று முடிவெடுத்தார் கர்தமப் பிரஜாபதி. பத்தாயிரம் வருடங்கள் திருமாலைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தார் கர்தமர். அந்தத் தவத்துக்கு உகந்து திருமால் கருட வாகனத்தில் அவருக்குக் காட்சி அளித்தார்.

கழுத்திலே வெள்ளை மற்றும் நீலத் தாமரைகளால் ஆன மாலைகளுடனும், அழகிய திருக்குழல் கற்றைகளுடனும், தூய மஞ்சள் பட்டாடையோடும், நான்கு திருக்கரங்களோடும், சங்கு சக்கரம் உள்ளிட்ட திவ்ய ஆயுதங்களோடும், முகத்தில் மெல்லிய புன்னகையோடும் தோன்றினார் திருமால். அவர் திருமார்பில் திருமகள் திகழ்கிறாள். அவரது திருவடிகளைக் கருடனின் தோள்களின் மேல் பதித்திருக்கிறார். இந்த உயர்ந்த அழகை ரசித்த கர்தமர், நான் எதை அடைய வேண்டும் என நினைத்துத் தவம் புரிந்தனோ அந்தப் பேரானந்தத்தை அடைந்துவிட்டேன் என்று கூறி பகவானைத் துதித்தார்.

கர்தமர், பகவான்தான் உண்மையான பேரானந்தம் என்று பிரம்மா மூலம் புரிந்துகொண்டு, பகவானை நோக்கித் தவம் புரிந்து நாராயணனைக் கருட வாகனத்தில் சேவித்து அந்த உண்மையான ஆனந்தத்தை அடையவும் செய்தார். பின், இந்தக் கர்தமர்க்கு வரமளிக்கும் விதமாக அவருக்கு மகனாகப் பிறந்து பேரானந்தத்தைத் தரப்போவதாக நாராயணன் அவருக்கு வாக்களித்தார்.

அதன்படி கர்தமரின் மகனாகக் கபில வாசுதேவராகப் பின்னர் திருமால் திரு அவதாரம் செய்தார். பேரானந்தம் பெற்றுய்ந்தார் கர்தமர். இப்படி ஆனந்தமே வடிவெடுத்தவராக இருந்து, அடியார்க்குப் பேரானந்தம் தருவதால், கபில வாசுதேவர் ஆனந்த என்று அழைக்கப் படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 529-வது திருநாமம்.

“ஆனந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பேரானந்தத்தைத் திருமால் தந்தருள்வார்.

  1. நந்தனாய நமஹ(Nandanaaya Namaha)

திருமாலைக் குறித்துத் தவம் புரிந்த கர்தமப் பிரஜாபதிக்குத் திருமால் கருட வாகனத்தில் காட்சி தந்தார் என்பதைக் கடந்த திருநாம விளக்கத்தில் பார்த்தோம். அவ்வாறு தன்முன்னே தோன்றிய திருமாலைத் தரிசித்த கர்தமர், இறைவா, உன் கருணையை என்னவென்று போற்றுவேன்’ என்று துதிக்கத் தொடங்கினார்.நாங்கள் உன்னைக் குறித்துச் செய்யும் பக்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், அதை விடப் பன்மடங்காக நீ அருள்புரிகிறாயே. நீ செய்யும் அருளையும் நீ தரும் பலனையும் பார்க்கும் போது, நாங்கள் செய்யும் பக்தியோ வழிபாடோ பூஜ்ஜியம் என்று தான் சொல்ல வேண்டும்’ என்று பகவானிடம் கர்தமர் சொன்னார்.

அதன்பின் திருமால் கர்தமரைப் பார்த்து, என் அடியார்களின் நலனை நான் பேணாமல் வேறு யார் பேணுவார்கள்! அது இருக்கட்டும். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று சொல்லுங்கள். தருகிறேன்’ என்று கூறினார்.அதற்கு கர்தமர்,இறைவா, பிரம்மா என்னை மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டுப் பிரஜாபதி என்ற பதவியில் அமர்த்தி உள்ளார். ஆனால் நானோ அவர் தந்த கடமையை விட்டு நீயே கதி என்று தவத்தில் ஈடுபட்டு விட்டேன். இனி மேற்கொண்டு நான் பிரம்மாவின் கட்டளைப் படி தருமப்படி இல்வாழ்க்கை வாழ்ந்து, என் கடமையை நிறைவேற்ற அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினார்.

மேலும், இறைவா நீ தரும் இல்வாழ்க்கை நான் உன்னை வந்தடைவதற்குத் தடையாக ஆகிவிடக்கூடாது. அந்த உலகியல் சுகம் உன்னை நான் மறப்பதற்குக் காரணமாக ஆகிவிடக் கூடாது. அதற்கு நீயே அருள்புரிய வேண்டும் என்று கோரினார் கர்தமர்.அதற்கு திருமால்,கர்தமரே, நீங்கள் கவலைப் படவேண்டாம். என்னைக் குறித்துச் செய்த எந்த ஒரு வழிபாடும் வீண்போகாது. அதில் நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கு நல்ல இல்வாழ்க்கையும் அமையும். சுவாயம்புவ மனு தனது மகளான தேவஹூதியை உங்களுக்கு மணம் முடித்துத் தருவார். நாரதர் மூலம் உங்கள் பெருமையை மனுவுக்கு நான் உணர்த்திவிட்டேன். தேவஹூதியை மணந்து, இல்வாழ்க்கை தருமங்களை நன்றாகப் பின்பற்றுங்கள்.

உங்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களுக்கு ஏற்ற மாப்பிள்ளைகளும் உரிய காலத்தில் கிடைப்பார்கள். இல்வாழ்க்கை வாழும் காலத்தில் எனது நினைவும் உங்கள் மனதில் இருந்துகொண்டேதான் இருக்கும்.எல்லாவற்றுக்கும் மேலாக, நானே உங்களுக்கு மகனாக, பத்தாவது குழந்தையாக வந்து பிறப்பேன். அந்த அவதாரத்தில் எனக்குக் “கபில வாசுதேவன்’’ என்ற பெயர் ஏற்படும்.

எனது அந்த வடிவை நீங்கள் தியானித்து வாருங்கள். உரிய காலத்தில் உங்களுக்கு முக்தியையும் நானே தருவேன்’’ என்று கூறினார். இதைக் கேட்ட கர்தமர், பகவானின் கருணையை நினைத்து நினைத்து உருகினார். பேரானந்தம் தருபவர், பேரானந்தமே வடிவெடுத்தவர் என்றெல்லாம் பிரம்மா திருமாலைப் பற்றிச் சொன்னார். ஆனால் அவர் எத்தகைய அருளைப் புரிந்து எத்தகைய ஆனந்தம் தருவார் என்று இப்போதுதான் அறிந்தேன் என்று பரவசப்பட்டார் கர்தமர். அந்தப் பரவசத்தால் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் கர்தமர். அந்தக் கண்ணீர்தான் “பிந்து சரஸ்’’ என்ற பொய்கையாக உருவானது. இப்படிப் பொய்கையாக உருவாகும் அளவுக்கு ஆனந்தக்கண்ணீர் வடிக்கும்படி அடியார்களுக்குப் பேரானந்தம் அருள்வதால், திருமால் நந்தன என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 530-வது திருநாமம்.

“நந்தனாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் ஆனந்தக் கண்ணீர் சிந்த வைத்து மகிழ்விப்பார்.

  1. நந்தாய நமஹ (Nandhaaya Namaha)

கர்தமருக்குக் காட்சி அளித்த திருமால், உங்களுக்கு வரப்போகும் மனைவியை அவளது தந்தையே உங்களிடம் அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பார் எனச் சொல்லி இருந்தார். தானே மகனாகப் பிறப்பதாகவும் வாக்கு அளித்திருந்தார். இதையெல்லாம் கேட்டு மகிழ்ந்த கர்தமப் பிரஜாபதி, இறையருளை நினைத்து, தான் சிந்திய ஆனந்தக் கண்ணீரின் திரளான பிந்து சரஸ் கரையில் பகவானைத் தியானித்தபடி வாழ்ந்து வந்தார்.

அதே சமயம், நாரதர் சுவாயம்புவ மனுவைச் சந்தித்து, உங்கள் மகள் தேவஹூதிக்குத் தகுந்த வரன் கர்தமப் பிரஜாபதி ஆவார். அவரை பிந்து சரஸ் கரையில் சந்தியுங்கள் எனக் கூறினார். அழுக்கு படிந்த ரத்தினக் கல் போல் ஆசிரமத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்த அருமா மனிதரான கர்தமரைச் சந்தித்தார் சுவாயம்புவ மனு.

கர்தமரை அணுகித் தனது மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார் மனு. கர்தமரும் பகவானின் வாக்குப்படி இசைந்தார். திருமணம் நடந்தது. மிகச்சிறந்த அடியாரான கர்தமருக்குப் பணிவிடை செய்வது தன் பாக்கியம் என்று கருதிய தேவஹூதியும், அடியார்க்கு அடியாராகத் தன்னை நினைத்து கர்தமருக்கு அனைத்துப் பணிவிடைகளும் செய்து வந்தாள்.

காலங்கள் கடந்தன. ஒரு நாள், கர்தமர் தியானத்தில் இருந்து கண் விழித்து, தேவஹூதியைப் பார்த்தார். தேவஹூதி மிகவும் வயதான நிலையில் இருப்பதைக் கவனித்தார். நமக்குச் சேவை செய்தே இவளுடைய இளமைக் காலம் கழிந்துவிட்டதே. இவளுக்காக நாம் ஒன்றுமே செய்யவில்லையே என வருந்தினார் கர்தமர். `உனது இளமை முழுவதும் என் பணிவிடையிலேயே கழிந்து விட்டதா’? என்று அவளிடம் கேட்டார்.

உங்களுக்குப் பணிவிடை செய்ததே எனக்கு ஆனந்தம்’ எனக் கூறினாள் தேவஹூதி. கர்தமர், தேவஹூதியை பிந்து சரஸில் நீராடச் சொன்னார்.நீராடியதும் தேவஹூதிக்கு இளமை திரும்பியது. வெளியே வந்து பார்த்தபோது, கர்தமரும் இளமையாகக் காட்சி அளித்தார்.இருவரும் திவ்வியமான விமானத்தில் ஏறி 100 வருடங்கள் உலகத்தைச் சுற்றினர். தேவஹூதி கர்தமரிடம்,எப்படி நமக்கு இளமையும், இளமைக் காலத்தில் கிடைக்கும் அனைத்து இன்பங்களும் இப்போது கிடக்கின்றன’ எனக் கேட்டாள். அதற்குக் கர்தமர், `நாராயணன் தர்மத்துக்கு விரோதமில்லாமல் அனைத்து இன்பங்களும் எனக்குக் கிடைக்கும் என வரம் கொடுத்தார். மேலும், அவரே மகனாக பிறப்பதாகவும் வரம் கொடுத்துள்ளார்’ எனக் கூறினார். பகவானிடம் அனைத்து இன்பங்களுக்கு உரிய கருவிகளும் இருக்கின்றன. அவனே நமக்கு எது நல்லதோ அதைக் கொடுப்பான்.

நாம் அவன் அருள் மட்டும் போதும் என மனதார வேண்டினால் நமக்குத் தேவையான உலகியல் இன்பமும் கொடுத்து மோட்சத்துக்கான வழியும் தருவான் என்றும் கூறினார் கர்தமர். இப்படி அடியார்கள் இன்பம் துய்ப்பதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தன்னகத்தே கொண்டவராக விளங்கி, உரிய நேரத்தில் அவற்றை அடியார்களுக்கும் தந்து அனுபவிக்கச் செய்வதால், திருமால் `நந்த’ என்று அழைக்கப் படுகிறார். நந்த என்றால் இன்பத்துக்குரிய கருவிகள் அனைத்தையும் தன்னகத்தே உடையவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 531-வது திருநாமம்.

“நந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு வாழ்வில் குறையில்லா மகிழ்ச்சி நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.

Tags : Anantan ,Gomathi ,Ayarpadi ,Ananthan ,
× RELATED கடலூரில் தேர்தல் தகராறில் பெண் கொலை...