×

அறிந்த தலம் அறியாத தகவல்கள்: சங்கரன் கோவில் கோமதி அன்னை

ஆடிப் பௌர்ணமி

அன்னை கோமதி தவம்செய்த ஆடி மாதப் பௌர்ணமி அன்று, இங்கு வந்து கோமதி அன்னையை வழி படுபவர்கள், பிறவித் துன்பம் தீர்ந்து அன்னையின் கருணைக் கடலில் மூழ்குவார்கள்.

தேவியுடன்

இங்கே ‘அதிகார நந்தி’ தம் தேவியுடன் தரிசனம் தருகிறார்.

ஆடித்தபசு காணிக்கை

இத்திருக் கோயிலில் பிரபலமான ஆடித்தபசு திருவிழாவின் போது, பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் இருந்து கொண்டுவந்த காய்-கறிகளைக் காணிக்கையாக அளிக்கிறார்கள்.

அபிஷேகம் யாருக்கு?

ஸ்ரீசங்கர நாராயணருக்கு அபிஷேகம் இல்லை. ஆனால், இங்கிருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் உண்டு.

கண்நோய் தீர

ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த திருத்தலத்தில் இருந்து, ஆரோக்கியத்தை அருளும் சூரியபகவானைத் தியானித்து விரதம் இருந்தால், கண்களில் வரும் நோய்கள் நீங்கும்.

சனிதோஷம் நீங்க

செவ்வாய்க்கிழமை அன்று, இந்த திருத் தலத்தில் இருந்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள், சனிதோஷம் நீங்கப்பெறுவார்கள். சனி தோஷத்தினால் விளையும் வியாதிகளும் நீங்கப் பெறுவார்கள்.

கல்வியில் சிறக்க

புதன்கிழமை அன்று இத்திருத்தலத்தில் இருந்து, விரதம் இருப்பவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ஞானம் பெற

இங்கு வந்து வியாழக்கிழமை அன்று விரதம் இருப்பவர்கள், ஞானநூல்களில் தேர்ச்சி பெற்று, ஞானம் பெறுவார்கள்.

இந்திரனைப் போன்ற செல்வம் பெற

வெள்ளிக்கிழமை அன்று இந்த திருத்தலத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள், தேவேந்திரனைப்போலப் பதவி, செல்வம் பெறுவார்கள்.

துன்பம் நீங்க

சனிக்கிழமை அன்று இந்த திருத்தலத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள், பொறாமை முதலான தீய குணங்கள் நீங்கி, துன்பம் நீங்கப் பெறுவார்கள்.

எட்டும் எட்டும்

அஷ்ட ஐஸ்வர்யங்கள் எனப்படும் எட்டு விதமான செல்வங்களையும் அருளும் இங்குள்ள ஈசருக்கு எட்டுவிதமான திருநாமங்கள் உண்டு. அவை, வரராசை நாதர், வைத்தியநாதர், சீராசை நாதர், புன்னைவன நாதர், சங்கர லிங்கர், கூழையாண்டி, சங்கர நாராயணர், சங்கரமூர்த்தி எனும் திருநாமங்களே ஆகும்.

பிரசாதப் புற்று

சங்கரலிங்கர் திருக்கோயிலில் வடமேற்கு மூலையில், புற்று உள்ளது. அந்தப்புற்றைச் சுற்றி வேலிபோட்டுப் பாதுகாக்கப் பட்டுள்ளது. வருவோரின் உடற்பிணிகளை எல்லாம் தீர்க்கும் மருந்து இந்தப் புற்றுமண். இங்கே பிரசாதமாகக் கொடுக்கப் படுவது, இந்தப் புற்று மண்ணே.

நாக – சர்ப்ப தோஷம் நீங்க

இங்கு நாக மன்னர்களால் உருவாக்கப்பட்ட ‘நாகசுனை’யில் நீராடிவழிபாடு செய்தால், நாக – சர்ப்ப தோஷம் நீங்கும்.

நாக சுனை அதிசயம்

நாகங்களால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் இது என்பதால், இந்த ‘நாக சுனை’ தீர்த்தத்தில் நண்டு, ஆமை, தவளை, மீன் முதலான நீர் வாழும் உயிரினங்கள் இருக்காது.

விஷ நோய் நீங்க

நாகசுனையில் நீராடி, இந்த திருக்கோயில் புற்று மண் பிரசாதத்தைக் கடுகளவு உண்டால், விஷ நோய்கள் நீங்கும்.

சித்திரை மாதச் செல்வம்

சித்திரை மாதப்பிறப்பு அன்று இங்குள்ள நாகசுனையில் நீராடி, சிவபூஜை செய்து ஆலயத்தை வலம் வந்து வணங்குபவர்கள், குபேர செல்வத்தை அடைவார்கள்.

திங்கள் அமாவாசை

திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வரும் நன்னாளில், இங்குள்ள நாகசுனையில் நீராடி, வழிபாடு செய்பவர்கள் குபேர செல்வத்தை அடைவார்கள்.

வெள்ளிக்கிழமை அர்த்த ஜாமம்

வெள்ளிக்கிழமை அன்று அர்த்த ஜாமப்பூஜையின் போது, கோமதி அம்மனையும், ஈசனையும் பூஜை செய்பவர்கள், நினைத்த வரங்களைப்பெற்று வேண்டுதல் நிறைவேறப் பெறுவார்கள்.

அன்னையும் ஆசார்ய புருஷரும்

திருவாவடுதுறை ஆதீனத்தில் 10-வது ஆசார்ய புருஷராக, குரு மூர்த்தமாக இருந்த மகான், அன்னை கோமதியின் அருளை முழுமையாகப் பெற்றவர். அவர், இங்கே அன்னை கோமதியின் சந்நதியில் ஓர் அபூர்வமான மந்திரயந்திரத்தைத் தானே எழுதிப் பூஜை செய்து பதித்தார். மிகவும் சக்தி வாய்ந்த யந்திரம் அது. இங்கே அந்த யந்திரத்தின் கீழே அமர்ந்து வேண்டினால், தீராத நோய்கள் தீர்கின்றன, ஆட்டிப் படைக்கும் பேய், பிசாசு, பில்லி – சூனியங்களும் விலகி ஓடுகின்றன. இதை இங்கே, அன்னை கோமதியின் சந்நதியில் இன்றும் காணலாம்.

முதலும் முடிவும்

இந்திய விடுதலைப்போருக்கு முதல் முழக்கம் இட்டவர், தமிழ் நாட்டைச் சேர்ந்த பூலித்தேவர். ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக்கொள்ளப் பட்ட தகவல் இது. இவர் அன்னை கோமதியிடம் அளவிலா பக்தி கொண்டவர். அப்படிப்பட்ட அவர் பகைவரின் கைகளில் சிக்காமல், அப்படியே மறைந்து அன்னை கோமதியின் திருவடிகளில் இரண்டறக் கலந்த இடம் இங்கு உள்ளது. அந்தப் பகுதி இங்கே அன்னையின் ஆலயத்தில், பூலித் தேவர் மறைந்த இடம் என்று உள்ளது.

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

The post அறிந்த தலம் அறியாத தகவல்கள்: சங்கரன் கோவில் கோமதி அன்னை appeared first on Dinakaran.

Tags : Sankaran Temple ,Komathi ,Adib Poornami ,Komathi Tumadhi ,Poornami ,Gomadi ,Komati ,
× RELATED சங்கரன்கோவிலில் வணிகர் தின விழா