×

வேலூர் கோட்டையில் ஓராண்டாக காட்சிப்பொருளாக மாறிய சிற்றுண்டியகம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வேலூர்: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையில் ₹3 கோடி மதிப்பீட்டில் பழமையை பறைசாற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள சிற்றுண்டியகம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக மாறி உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாட்டின் சுற்றுலா வரைபடத்தில் கல்வி, ஆன்மீகம், மருத்துவம், பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களிலும் தனித்த இடத்தை வேலூர் மாவட்டம் பிடித்துள்ளது. குறிப்பாக வேலூர் மாநகரில் விஐடி பல்கலைக்கழகம், சிஎம்சி மருத்துவக்கல்லூரி, புரம் பொற்கோயில், வேலூர் கோட்டை, அமிர்தி சிறு வனஉயிரியல் பூங்கா அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் 25 ஆயிரம் பேர் வரை தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாட்டவர் என சுற்றுலா பயணிகள் வேலூர் வந்து செல்கின்றனர்.

ஆனால் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை பொறுத்தவரை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பாக வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க ஓய்வறைகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி, உணவக வசதி என ஏதும் இல்லாமல் கோட்டைக்குள் அவர்கள் அலைமோதும் நிலை நீடித்து வருகிறது. இதுபற்றி தொல்லியல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ, சுற்றுலாத்துறையோ கண்டுகொள்ளாத நிலையே இருந்து வந்தது. இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் மத்திய தொல்லியல்துறை சார்பில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வேலூர் கோட்டையை ஒட்டுமொத்தமாக பொலிவு பெற செய்வதற்காக ₹33.2 கோடியில் பணிகள் நடந்து வருகிறது.

இதில் ஜலகண்டேஸ்வரர் கோயில் அருகில் ₹3 கோடி மதிப்பீட்டில் பழமையை பறைசாற்றும் வகையிலான கட்டமைப்புடன் காபி, தேனீர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் வகைகள், பேக்கரி உணவுகளை வாங்கி அருந்தும் வகையில் சிற்றுண்டியகம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டிட பணிகள் முடிந்து ஓராண்டை கடந்த நிலையிலும் இச்சிற்றுண்டியகம் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. கோட்டையில் சிற்றுண்டியகம் காட்சிபொருளாகவே காட்சியளிப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே, மத்திய தொல்லியல்துறை கோட்டைக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ள சிற்றுண்டியகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளுடன், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர் கோட்டையில் ஓராண்டாக காட்சிப்பொருளாக மாறிய சிற்றுண்டியகம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Vellore Fort ,Vellore ,Vellore Castle ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...