×

வேதனை தீர்த்த கீர்த்தனை!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், மகான் முத்துசுவாமி தீட்சிதர். சங்கீத மும்மூர்த்தி களில் ஒருவரான இவர், பெரிய ஸ்ரீவித்யா (அம்பிகை வழிபாடு) உபாசகர். இவரது பக்தியை மெச்சி, தணிகை மலை மேவும் தனிப்பெரும் தெய்வம், ஒரு குழந்தையாக காட்சி தந்து, இவரது வாயில் கற்கண்டை இட்டு, கற்கண்டாய் பாடு என்று ஆணை இட்டது. அதன் பின் பாட ஆரம்பித்தவர்தான், இசை உலகில் ஒரு பெரிய புரட்சியையே செய்தார். ‘குருகுக’ என்ற குமரனின் பெயரை தனது அனைத்து பாடலிலும் இடம்பெறும்படி செய்து, குமரனின் பெயரை தனது முத்திரையாக மாற்றிக்கொண்டார். இவர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களும், அதிசயங்களும் ஏராளம் ஏராளம். அப்படி ஒரு அதிசயத்தை இப்போது பார்ப்போம் வாருங்கள்!

முத்துசுவாமி தீட்சிதருக்கு தம்பியப்பன் என்று ஒரு சீடன் இருந்தான். தினமும் நாள் தவறாமல் வகுப்பிற்கு வரும் அவன், பல நாட்களாக தொடர்ந்து வகுப்பிற்கு வரவில்லை. இதை குருவான முத்துசுவாமி தீட்சிதர், கவனிக்கத் தவறவில்லை. இசையில் நல்ல தேர்ச்சியும் அற்புதமான சாரீரமும் கொண்ட ஒரு மாணவன், வகுப்பிற்கு வராததால் தீட்சிதருக்கு வருத்தம் அதிகரித்தது. வகுப்பில் இருந்த மற்ற மாணவர்களிடம், காரணத்தை வினவினார் தீட்சிதர்.

பல நாட்களாக தம்பியப்பன் தீராத வயிற்று வலியால் படாத பாடு படுகிறான் என்றும், அதனால்தான் அவனால் வகுப்பிற்கு வர முடியவில்லை என்றும், தீட்சிதரின் மற்ற சீடர்கள் பதில் பகர்ந்தார்கள். இதைக் கேட்டதும் தீட்சிதர் சட்டென்று எழுந்து, தம்பியப்பன் இல்லம் நோக்கி விரைந்தார்.அங்கே வயிற்றுவலியால் சுருண்டு போய் படுத்திருந்தான் அவன். குரு வந்திருப்பதை அறிந்த அவன், எழுந்து நிற்க முடியாமல் திண்டாடினான். அவனை படுத்திருக்கும் படி செய்கை செய்தார் தீட்சிதர்.

ஆடிப் பாடி ஓடித் திரிந்த மாணவன், இன்று எழுந்து நிற்கக்கூட முடியாமல் திண்டாடுவதை கண்ட தீட்சிதருக்கு குலையே நடுங்கியது. மெல்ல தன்னை தேற்றிக் கொண்டு, தம்பியப்பனின் ஜாதகத்தை கொண்டு வரும்படி அவனது உறவினர்களிடம் கேட்டுக்கொண்டார். இரண்டொரு நொடிகளில் தம்பியப்பனின் ஜாதகம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை நன்கு ஆராய்ந்த தீட்சிதருக்கு, அதில் குரு நீசமாகவும், பலமில்லாமலும் இருப்பது புரிந்தது. தீராத வயிற்று வலிக்கும் அதுதான் காரணம் என்பதும் விளங்கியது.

உடன் குரு பிரீதிக்காக (மகிழ்விக்க) செய்ய வேண்டிய ஹோமங்கள் பூஜைகள் முதலியவையை தீட்சிதர் எடுத்துரைத்தார். அந்த பூஜைகளை முறையாக செய்துவந்தால், வலி படிப்படியாக விலகும் என்று கூறினார்.ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. தீட்சிதர் சொன்ன பூஜைகளை செய்யும் அளவுக்கு தம்பியப்பனிடம் வசதி இல்லை. அவனை நம்பி கடன் தருவாரும் யாரும் இல்லை. இதை தீட்சிதரிடம், வருத்தத்தோடு தெரிவித்தான் அவன். சிக்கலை தீர்க்கத்தானே மகான்கள் இருக்கிறார்கள்? இந்த சிக்கல் தீட்சிதருக்கு ஒரு தூசுகூட பெறாத விஷயம். ஆகவே நொடியில் புன்னகையோடு வேறு ஒரு உபாயம் கூற ஆரம்பித்தார்.

ஒரு சிறு பாடலை அவன் தலைமாட்டில் அமர்ந்த படியே இயற்றினார். அதற்கு `அடானா’ ராகத்தில் இசை அமைத்தார். அதை தம்பியப்பன், படுக்கையில் இருந்தபடியே பாடும்படி செய்தார். இந்த பாடலை தினமும் பாடி குரு பகவானை வேண்டிக்கொள்ளுமாறு பணித்தார். அதிகபட்சம் ஒரு மண்டலத்திற்குள் வயிற்று வலி நீங்கிவிடும் என்று நம்பிக்கை தந்தார். ஆனால், ஒரு முறை அந்த கீர்த்தனை பாடியதற்கே, பெருமளவு வேதனை குறைந்தது போல அவன் உணர்ந்தான். குரு தோஷத்தை நீக்க வந்த தனது குருவை, கையெடுத்து வணங்கி, கண்ணீர் வடித்தான். வலி குறைந்ததற்கு தேவ குருவின் கருணை காரணமா, இல்லை தனது இதய குரு தீட்சிதர் காரணமா என்று தெரியாமல் திண்டாடினான்.

அவனை பொறுத்தவரையில் அந்த தேவ குருவே இந்த மானிடனுக்கு குருவாக வந்திருக்கிறார் என்று தோன்றியது. அந்த எண்ணத்தின் விளைவே அந்த ஆனந்தக் கண்ணீர். அதை கண்ட தீட்சிதர், வாஞ்சையோடு வலது கரம் உயர்த்தி ஆசி வழங்கினார். தீட்சிதர் சொன்னது போலவே ஒரு மண்டலத்தில் தம்பியப்பனின் வயிற்றுவலி நீங்கியது. அதைக் கண்டு வியந்த மக்கள், இதைப் போலவே மற்ற கிரகங்களின் தோஷங்கள் நீங்குவதற்காக அவரை பாடல் இயற்றித் தரும் படி வேண்டினார்கள்.

மக்களின் வேண்டுகோளின்படி தீட்சிதர், அனைத்து கிரகங்களுக்கும் இதுபோல கீர்த்தனை இயற்றினார். அதற்கு ‘நவகிரக கீர்த்தனை’ என்று பெயர். இன்றளவும் அது இசைப்பவரையும், கேட்பவரையும், துன்பக்கடலில் இருந்து காத்து இன்பம் சேர்க்கிறது, என்பது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை. வாருங்கள் இப்போது, தம்பியப்பனின் வயிற்று வலி நீக்கிய பாடலை பார்க்கலாம்.

‘பிருஹஸ்பதே! தாரா பதே…’ எனத்தொடங்கும் கீர்த்தனை அது. அடானா ராகத்தில் அமைந்தது. அடானா என்றால் ‘ட’ வடிவில் இருக்கும் ஓர் ஆயுதம். இந்த காலத்தில் அதை ‘பூமராங்’ என்று அழைக்கிறார்கள். இது தாக்க வேண்டியவரை தாக்கிவிட்டு பிறகு எய்தவன் கைக்கே திரும்பி வந்து விடும். அதாவது, தோன்றிய இடத்திலேயே வந்து முடியும். அதுபோலவே இந்த ராகமும் ஏற்றமும் இறக்கமுமாக மாறி மாறி வந்து, அடானா ஆயுதத்தின் அசைவை போலவே இருக்கும். இந்த அடானா பழந்தமிழர்களின் ஒரு ‘உன்னத ஆயுதம்’ என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் உபயோகிக்கும் ஆயுதத்தின் அசைவுக்கு ஏற்ப ஒரு ராகம் ஏற்படுத்திய, நம் முன்னோர்களின் திறனை என்னவென்று சொல்வது?

இது எல்லாம் இருக்கட்டும்… தேவ குருவை மகிழ்விக்க தீட்சிதர் ஏன் இந்த ராகத்தை தேர்ந்தெடுத்தார்? இந்தக் கேள்விக்கான பதிலில் ஒரு பெரிய சூட்சுமமே அடங்கி இருக்கிறது. ஆம். ஒவ்வொரு ராகத்திற்கும், உரிய நிறம், காலம், தேவதை என்று எல்லாம் இசை இலக் கணத்தில் உண்டு. அந்த இலக்கணத்தின்படி இந்த ராகத்திற்கு உரிய நிறம், தூய பொன்னிறம் ஆகும். குருவிற்கு உரிய உலோகம் பொன். உரிய நிறம் பொன்னிறம். இதனால்தான் அவருக்கு பொன்னன் என்று பெயரே வந்தது. பொன்னனுக்கு, பொன்னிற ராகத்தை தேர்ந்தெடுத்தார் தீட்சிதர். இது எத்தனை பொருத்தம் பாருங்கள். இந்த கீர்த்தனையில் ஒவ்வொரு எழுத்திலும் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. இவை அனைத்தையும் எடுத்துச் சொன்னால் கட்டுரை விரிந்து விடும். ஆகவே சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

கீர்த்தனையில் பிருஹஸ்பதியை ‘மாதவாதி வினுத தீமதே…’ என்று போற்றுகிறார் தீட்சிதர். திருமால் போற்றும் திருமகன் என்று பிருகஸ்பதியை போற்றுகிறார். ஆதாரம் இல்லாமல் சொல்பவரா தீட்சிதர்..? நவக்கிரகங்களில் நாராயணனே போற்றும் ஒரே கிரகம் குருதான். பகவத் கீதையின் பத்தவாது அத்தியாயத்தில் வரும் ஸ்லோகம் இது. ‘புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த்த பிருஹஸ்பதிம்’. இதில் கண்ணன், ‘அர்ஜூனன் இடத்தில், நான் குருமார்களின் தேவ குருவான பிருஹஸ்பதியாக உள்ளேன்’ என்கிறான். இந்தப் பெருமை வேறு எந்த கிரகத்திற்கும் கிடைக்காத ஒன்றாகும். இதை அற்புதமாக எடுத்து இயம்புகிறார் தீட்சிதர். ‘புராரி குருகுக சுமோதித’ என்று அடுத்து சொல்கிறார்.

அதாவது, ஈசனும் ஈசன் மகனும் போற்றும் திறம் பெற்றவர் என்று பொருள். காசியில் சிவலிங்கம் நிறுவி, பன்னெடுங்காலமாக தவமிருந்து, ஈசன் அருளால் கிரகப் பதவி பெற்றவர் குரு. ஈசன் அவரது தவத்தை மெச்சியே இப்படி வரம் தந்தார் என்று சொல்லவும் வேண்டுமா? (காசி காண்டம் செவ்வாய் வியாழன் சனியுலகம் கண்ட படலம்).

சென்னையில் பாடியின் அருகே ‘திருவலிதாயம்’ என்ற தலம் அமைந்திருக்கிறது. இங்கே தனது சகோதரனின் மனைவியிடம் சாபம் பெற்ற குரு, இறைவனை பூஜித்து விமோசனம் அடைந்தார். இதனால் இன்றும் கோயிலில் குருவிற்கு தனி சந்நதி உள்ளது. மேலும் பல தலங்களில் குருவின் தவத்தை மெச்சி, ஈசன் காட்சி தந்திருக்கிறார். அது மட்டுமில்லை தேவர்களின் துயர் தீர்க்க வேண்டி குரு திருச்செந்தூரில் முருகனை சரண் அடைந்தார். அவரது பக்தியை மெச்சியே முருகன் போர் செய்து சூரபத்மனை அழித்தான்.

அடுத்து ‘நீதி கர்த்ரே’ என்று குருவை போற்றுகிறார் தீட்சிதர். சுக்ரன் செய்த நீதி நூல் இன்றும் ‘சுக்ர நீதி’ என்ற பெயரில் உலகில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பிருஹஸ்பதி செய்த ‘பிருகஸ்பதி நீதி’ என்னும் நூல் நமக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம். ஆனாலும் இந்த நூல் நமது பழந்தமிழர்கள் போற்றிப் பாதுகாத்த சிறந்த நூலாக விளங்கியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

உலகப் பொது மறையான திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் என்ற பழந்தமிழ் வைணவப் புலவர், 662 ஆவது திருக்குறளுக்கு உரை எழுதும் போது, பிருகஸ்பதி நீதியை மேற்கோள் காட்டுவது குறிப்பிடத்தக்கது. அம்பிகை போற்றும் வித்தகர் குருபகவான் என்று மறைமுகமாக தீட்சிதர் சொல்கிறார். ‘பராதி சத்வாரி வாக் ஸ்வரூப’ என்று கீர்த்தனையில் வருகிறது. நாவில் இருந்து எழும் ஓசையை நான்கு விதமாக பிரிக்கலாம். அவை, பரா, பஷ்யங்தி, மத்யமா, வைகரீ என்பன. மூலாதாரத்தில் இருந்து தோன்றுவது ‘பரா’ என்னும் ஓசைகள்.

இந்த ஓசையானது மூலாதாரத்தில் இருந்து கிளம்பி நாபிக்கு வரும்போது மனத்தின் எண்ணத்தோடு கலந்து ‘பஷ்யந்தி’ என்ற வாக்காகிறது. நாபியை கடந்து இதயத்தை அடையும்போது தீர்மானம் செய்யும் தன்மையை அடைந்து, ‘மத்தியமா’ என்ற ஓசையாகிறது. இதுவே, கழுத்து வரை அடைத்து வாயின் மூலமாக வெளிவரும் போது ‘அ’ முதலிய எழுத்துக்களின் வடிவை பெறுகிறது. இதைதான் ‘வைகரீ’ என்று கூறுகிறோம். இந்த நான்கு வாக்கின் வடிவாகவும் பிருகஸ்பதி இருப்பதாக தீட்சிதர் கூறுகிறார். அம்பிகையும் இந்த வாக்கின் வடிவாக இருப்பதாக லலிதா ஸஹஸ்ரநாமம் கூறுகிறது.

‘பரா பிரத்யக்சிதீ ரூபா பஷ்யந்தி பர தேவதா… மத்யமா வைகரீ ரூபா’ போன்ற நாமங்கள் அம்பிகை இந்த நான்கு வாக்கின் வடிவாக இருப்பதாக கூறுகிறது. இதிலிருந்து, தனது பக்தியாலும், தவத்தாலும் அம்பிகையோடு இரண்டறக் கலந்து, அவள் அருளால் நான்கு வாக்கின் அதிபதியாக குரு விளங்குகிறார் என்று புரிகிறது இல்லையா?

இப்போது கீர்த்தனையை பார்ப்போம் வாருங்கள்!
பிருகஸ்பதே தாரா பதே பிரம்மஜாதே நமோஸ்துதே
மஹாபல விபோ கீஷ்பதே மஞ்ஜ தனுர் மீனாதிபதே
மகேந்திரோத்பாசித கதே மாதவாதி வினுத தீமதே
சுராச்சார்ய வர்ய வஜ்ர தர ஸபலக்ஷன ஜெகத் த்ரய குரோ

ஜராதி வர்ஜித அக்ரோத கச ஜனக ஆஸ்ரிதஜன கல்பதரோ
புராரி குருகுக சுமோதித புத்ர காரக தீனபந்தோ
பராதி சத்வாரி வாக்ஸ்வரூப பிரகாசக தயாசிந்தோ
நிராமயாய நீதி கர்த்ரே நிரஞ்சனா புவன போக்த்ரே நிர்ஸாய மகா பிரதாத்ரே

  • இந்த அற்புதமான கீர்தனையை பாடி நாமும் குருவருள் பெறுவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post வேதனை தீர்த்த கீர்த்தனை! appeared first on Dinakaran.

Tags : Mahan Muthuswami Dikshidar ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…