×

என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 495 மாணவர்கள் தேர்ச்சி

சேலம், ஏப்.16: தமிழகத்தில் நடந்த கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 495 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இரண்டரை மடங்கு அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சார்பில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி, கல்வி உதவித்ெதாகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் தலா ₹1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். நடப்பாண்டிற்கான என்எம்எம்எஸ் தேர்வு, கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, இத்தேர்வினை எழுத 11,602 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்காக 47 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு நடந்த தேர்வில், 11,407 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகம் முழுவதிலும் மதிப்பெண் அடிப்படையில், 6,695 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், சேலம் மாவட்டத்தில் தேர்வெழுதிய 495 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இது மாவட்டத்தில் கடந்த ஆண்டு என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை விட, இரண்டரை மடங்கு அதிகமாகும். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒன்றிய அரசால் நடத்தப்படும் என்எம்எம்எஸ் தேர்வில், தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு, ஒவ்வொரு மாதமும் தலா ₹1,000 வீதம், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அடுத்த 4 வருடங்களுக்கு மொத்தமாக ₹48,000 உதவித்தொகை வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டித்தேர்வுகளை திறம்பட எதிர்கொள்ள, ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, எம்எம்எம்எஸ் தேர்வு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. இதன்காரணமாக, நடப்பாண்டு மாநில அளவில் அதிகபட்சமாக 705 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 11,602 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். இவர்களில் 195 பேர் மட்டும் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநில அளவில் 6,695 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 495 மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். மாநில அளவில், சேலம் மாவட்டத்தில் இருந்து அதிக மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கான உதவித்தொகை, வங்கி கணக்கில் செலுத்தப்படும். கடந்த ஆண்டு, ேசலம் மாவட்டத்திலிருந்து 195 மாணவர்கள் மட்டும் தேர்வான நிலையில், நடப்பாண்டு அதன் எண்ணிக்கை சுமார் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல், பயிற்சி வழங்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு மாதிரி தேர்வும், அலகு தேர்வும் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் தொடர் பயிற்சி வழங்கியதன் காரணமாக, இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 495 மாணவர்கள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : NMMS ,Salem ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணி தீவிரம்