×

இந்திய விண்வெளி சங்கம் தொடக்கம் தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாகும்: மோடி பேச்சு

புதுடெல்லி: இந்திய விண்வெளி சங்கத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘‘தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதே அரசின் கொள்கை’’ என்றார். விண்வெளி பணிகள் தொடர்பான சாதனங்களை உருவாக்கி வரும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பாக இந்திய விண்வெளி சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் விண்வெளி தொழில்நுட்பத்தை அதிகரிக்க உதவும் ஒரு தனியார் தொழில் அமைப்பாகும். இதன் நிறுவன உறுப்பினர்களாக ஒன்வெப், பார்தி ஏர்டெல், மேப்மைஇண்டியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் திறன் மேம்பாடு மற்றும் விண்வெளி பொருளாதார மையங்களை உருவாக்க இஸ்ரோவுடன் இணைந்து செயல்படும்.இத்தகைய இந்திய விண்வெளி சங்கத்தை, பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியா முன் எப்போதும் இல்லாத உறுதியான அரசாங்கத்தை பெற்றுள்ளது.  ஏனெனில் ‘தற்சார்பு இந்தியா’ என்ற அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வை தெளிவாக இருப்பதால் சீர்த்திருத்தங்கள் சாத்தியமாகின்றன. தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதே இந்த அரசின் கொள்கை. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வெற்றிகரமாக தனியார்மயமாக்கி உள்ளோம். இதே போல, தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்.தேச நலனையும், பல்வேறு பங்குதாரர்களின் தேவையை கருத்தில் கொண்டே, விண்வெளி முதல் பாதுகாப்பு துறை வரை பல துறைகளில் தனியாருக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று விண்வெளி துறையில் முழுமையான தொழில்நுட்பத்தை கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இனி அரசுகள் ஒரு கூட்டாளியாக இருந்து, தொழில் துறை, இளம் கண்டுபிடிப்பாளர்கள், புதிய நிறுவனங்கள் உருவாக தேவையான உதவிகளை தொடர்ந்து செய்யும். புதுமைகளை கண்டுபிடிக்க தனியார் துறைக்கு முழு சுதந்திரம் தருவது, இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவது, சமானியனின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு வளமாக விண்வெளி துறையை பயன்படுத்துவது என்பதன் அடிப்படையில் விண்வெளி துறையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.* தரமான ஆயுதங்களை உருவாக்க வேண்டும்நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்று பேசுகையில், ‘‘நமது ஆயுதப்படைக்கு தேவையான கருவிகளை இந்திய தொழில்துறை படிப்படியாக உருவாக்கித் தர வேண்டுமென எதிர்பார்க்கிறோம். போரில் வெற்றி தேடித் தரக்கூடிய புதுமையான, தரமான ஆயுதங்களை இந்திய தொழில் நிறுவனங்கள் தயாரிக்க முன்வர வேண்டும்’’ என்றார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசுகையில், ‘‘தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் நீண்ட காலமாக அரசாங்கம் மட்டுமே ஒரே பங்குதாரராக இருக்க முடியாது. தேசத்தை கட்டமைப்பதில் தனியார் துறையும் சம பங்குதாரராக மாற வேண்டும். அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள தனியார் தொழில்துறையின் பங்களிப்பும் அவசியம்’’ என்றார்….

The post இந்திய விண்வெளி சங்கம் தொடக்கம் தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாகும்: மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PSUs ,Indian Space Society ,Modi ,New Delhi ,
× RELATED சொல்லிட்டாங்க…