×

மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி வழங்க காலக்கெடு தேவை பாஜ அல்லாத முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்: தமிழ்நாடு போல தனி தீர்மானம் இயற்ற வேண்டுகோள்

சென்னை: சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க, மாநில ஆளுநர்களுக்கு ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் தகுந்த அறிவுரைகள் வழங்க வலியுறுத்தி, ஒவ்வொரு மாநில சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி பாஜ அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் ஆர்.என்.ரவி ஆளுநராக பதவி ஏற்ற பிறகு, தமிழக அரசுடன் பல்வேறு வகைகளில் மோதல் போக்குகளை உருவாக்கி வருகிறார். குறிப்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களிலும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

மேலும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டு வருகிறார். அதோடு, மாணவர்கள், பேராசிரியர்கள், குடிமைப் பணி தேர்வு எழுதும் மாணவர்களுடன் சந்திப்பு என்று பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதில், இந்த தீர்மானங்களை விமர்சித்துப் பேசி வந்தார். அதோடு, தமிழக அரசை விமர்சனம் செய்கிறவர்களை அழைத்து தனியாக பேசி வந்தார். இந்தநிலையில்தான் இரு நாட்களுக்கு முன்னர் குடிமைப் பணி தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி தராவிட்டால், அது நீர்த்துப்போனதாக அர்த்தம் என்று பேசினார். ஏற்கனவே 14க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார்.

அதில் குறிப்பாக ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவுக்கு அனுமதி தராமல், கிடப்பில் போட்டிருந்தார். பின்னர் சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று மசோதாவை திருப்பி அனுப்பினார். ஆனால், அந்த மசோதா அப்படியே ஆளுநருக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் பேசியது தமிழக மக்களை உதாசீனப்படுத்துவதாக அர்த்தம் என்று கூறப்பட்டது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்றும், இது குறித்து ஆளுநருக்கு உரிய ஆலோசனைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் 4ல் 3 பங்கு மெஜாரிட்டியுடன் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், பாஜ அல்லாத அனைத்து மாநில முதல்வர்களையும் ஒரே கருத்தொற்றுமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கருதிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தக் கடிதத்தை அவர்களுக்கு நேற்று மாலை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும், நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதையும் காண்கிறோம். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது பின்பற்றப்படுவதோ இல்லை. அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் அந்த குறிப்பிட்ட இனங்களில் முடங்கிப் போயிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட ‘ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதா’ உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பொருட்டு ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களை பலமுறை தெளிவுபடுத்தியும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதே நிலைதான், பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன.

இந்தச் சூழ்நிலையில், அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு ஒன்றிய அரசு மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும். அது சம்பந்தமாக கடந்த 10ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் சாராம்சத்தையும் எனது கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நோக்கம் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்களது மாநில சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்காக தங்கள் ஆதரவை வழங்குவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு ஒன்றிய அரசு மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும். அது சம்பந்தமாக கடந்த 10ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் சாராம்சத்தையும் எனது கடிதத்துடன் இணைத்து
அனுப்பியுள்ளேன்.

The post மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி வழங்க காலக்கெடு தேவை பாஜ அல்லாத முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்: தமிழ்நாடு போல தனி தீர்மானம் இயற்ற வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : BJ. G.K. Stalin ,Tamil Nadu ,Chennai ,Government of the Union ,President of the Republic ,Legislative Assembly ,B.C. ,G.K. Stalin ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் எதிரொலி...