×

எது வழிபாடு?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வணக்கம் நலந்தானே!

வழிபாடு என்பதன் இலக்கை அறிந்து கொண்டால் நாம் இன்னும் நம் வழிபாட்டை லகுவாக்கிக் கொள்ளலாம். ஏனெனில், ஏன் வழிபாடு என்கிற கிரியை உள்ளது என்பதை தீர்க்கமாக புரிந்து கொள்ள வேண்டும். எதை நோக்கி நாம் வழிபடுகின்றோமோ அதுவாகவே நாம் ஆக வேண்டும் என்பது இறுதி உண்மை. இந்த உண்மைக்கு இடையே பல நிலைகள் உள்ளன. லௌகீக வாழ்க்கைக்கான தேவைகள் உட்பட சகலத்திற்குமே இங்கு வழிபாடு என்கிற கிரியையை நாம் கைக்கொள்கிறோம்.

பரவாயில்லை. மனதிற்கு எடுத்ததுமே நீ அதுவாக மாறி நில்… நீ வணங்கும் அந்த பிரம்மமே நீதான் என்பதை இக்கணமே அறிந்து விடு என்றால் மனம் முழி முழியென்று முழிக்கும். எனவே, முதலில் உனக்கு என்ன வேண்டுமோ அதை பிரார்த்தனையாகவோ அல்லது துதிகளாகவோ கேட்டுக் கேட்டு வாங்கிக் கொள் என்று சொல்வோமாயின் அது பவ்யமாக பின் தொடரும்.

இங்குதான் மனமே தான் அறியாதவாறு தன்னிடம் ஒரு அற்புதமான விஷயம் இருப்பதை அறிந்து கொள்கிறது. அதாவது மனம் எந்த விஷயத்தில் குவியம் கொள்கின்றதோ… எதில் மிகக் கூர்மையாக ஈடுபடுகின்றதோ அதே அளவிற்கு தன்னுடைய அகத்திற்குள் சென்றும் ஒடுங்குகின்றது. இருபுறமும் கூர்மையான கத்தியைப் போலத்தான் இது.

நீங்கள் எதை நோக்கி வழிபடுகிறீர்களோ அந்த பிரதிமையின் தன்மையானது உங்களுக்குள் வந்து தங்கும். மெல்ல மெல்ல நீங்கள் அதுவாகவே மாறுவீர்கள். இங்கு நுட்பமாக கவனித்தால் உங்களுக்கென்று இருந்த மனம். உங்களை அதோ … இதோ … என்று எங்கெல்லாமோ அலைக்கழித்த மனமானது தன்னையும் அறியாமல் தேயத் தொடங்கும். அழிந்து கொண்டே வரும். பாம்பின் வாயில் அகப்பட்ட உணவைப்போல மெல்ல மெல்ல நீங்கள் வணங்கும் மகாசக்திக்கு உங்கள் மனம் உணவாகும்.

உங்களுக்குள் அந்த மகாசக்தி சட்டென்று ஜொலிக்கத் தொடங்கும். நீங்கள் எங்கேயோ சிறியதாக கைகூப்பி தொடங்கிய வழிபாடானது மெல்ல மெல்ல பூஜை, உபாசனை என்று பெருகிப் பெருகி தான் என்கிற அகங்காரத்தை அழித்து தானேயான அந்த பிரம்மத்தை அமர வைத்து விடும். அப்போது செயலைச் செய்பவர் இல்லாமல் செயல் மட்டுமே நடக்கும் அதை நடத்துபவர் யாரென்று கேட்கும்போது எல்லாம் அவன் சித்தம் என்று சொல்வீர்கள்.

இப்போது அவர் செய்யும் செயல்கள் அனைத்துமே வழிபாடுதான். ஏனெனில், இன்னது செய்கிறேன் என்று இதுவரை சொல்லி வந்த அகங்காரம் மறைந்து விட்டது. அதனால்தான் நீங்கள் எந்தச் செயலைச் செய்யும்போதும் மனம் ஒன்றிச் செய்யும்போது நீங்கள் உங்களை இழப்பீர்கள். பாடகரோ, கவிஞரோ, ஓவியரோ ஒரு கட்டத்தில் தன்னை இழந்து வேறொன்றாக மாறுகிறார்கள். அப்போது செயலைச் செய்பவர் மறைகிறார். இந்த மறையும்போதெல்லாம் அவர் செய்வதும் வழிபாடுதான். கொஞ்சம் உங்கள் அனுபவத்தோடு உணர்ந்தால் இது எளிதாகப் புரியும்.

தொகுப்பு: கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)

The post எது வழிபாடு? appeared first on Dinakaran.

Tags : Kumkunum Anmigam ,
× RELATED இடையறாத வழிபாடு