×

திருச்சி மாவட்டத்தில் மனநல காப்பகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு: மனநலம் பாதிக்கப்பட்டவர்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்

திருச்சி, ஏப்.12: திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் வேலா மனநல காப்பகம், சங்கராலயா மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இடை நில்லா காப்பகம் மற்றும் 14 வயதிற்கு மேற்பட்ட அறிவுசார் குறையுடையோருக்கான விடுதி வசதி மற்றும் தொழிற்பயிற்சியுடன் கூடிய பெண்களுக்கான இல்லத்தை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகாவில் அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் வேலா மனநல காப்பகம், சங்கராலயா மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இடை நில்லா காப்பகம் மற்றும் 14 வயதிற்கு மேற்பட்ட அறிவுசார் குறையுடையோருக்கான விடுதி வசதி மற்றும் தொழிற்பயிற்சியுடன் கூடிய பெண்களுக்கான இல்லம் இயங்கி வருகிறது. இவற்றை திருச்சி கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது: அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் இல்லங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கான பதிவுச் சட்டம் 2016 மற்றும் மனநல காப்பகத்திற்கான மனநலச்சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று பெறப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சுமார் ரூ.13,00,800 வீதம் 3 இல்லங்களுக்கு ரூ.39,02,400 அரசு மானியம் ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியமானது பணியாளர்கள் ஊதியம், பயனாளிகளுக்கான உணவூட்டு மானியம், மருத்துவ செலவினங்கள், தொழிற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கான இதர செலவினங்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது’ என்றார். மேலும், மனநல காப்பகங்களை தூய்மையாக வைத்திருக்கவும், பல்வேறு பதிவேடுகள் உரிய முறையில் பராமரிக்கவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு, அவர்களை மறுபடியும் அவர்களது தத்தம் குடும்பத்தினருடன் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும்,

அவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கவும், அதனை சந்தைப்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கவும், பயனாளிகளுக்கு தனி வங்கிக் கணக்கு துவங்குவதற்கும் கலெக்டர் ஆலோசனை வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை மீட்புத்திட்டத்தின் கீழ் மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், கலெக்டர் தன் விருப்ப நிதியிலிருந்து, புனித அன்னாள் அறிவுசார் குறையுடைய பெண்களுக்கான இல்லத்திற்கு, பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார், லால்குடி ஆர்டிஓ வைத்திநாதன், உதவி இயக்குநர் (பயிற்சி) சவுந்தர்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post திருச்சி மாவட்டத்தில் மனநல காப்பகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு: மனநலம் பாதிக்கப்பட்டவர்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Trichy District ,Trichy ,Vela Psychiatry Archive ,Sankaralaya Psychiatric Archive ,
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு