×

அரண்வாயல் குப்பம் பகுதியில் நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி சாலை மறியல்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பம் பகுதியில் அரசினர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அரண்வாயல், அரண்வாயல் குப்பம், பாரதியார் நகர், முருகஞ்சேரி, வ.உ.சி. நகர் போன்ற சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 130க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் இங்கு பயிலும் மாணவ மாணவிகள் உயர் கல்வியான 10 மற்றும் 12ம் வகுப்பு பயில வேண்டுமானால் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொப்பூர் மற்றும் மணவாளநகருக்கு சென்று தான் படிக்க வேண்டும்.  இதைத்தொடர்ந்து அரண்வாயல்  பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசினர் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.   கடந்த 2012ம் ஆண்டு பொதுமக்கள் சார்பில் பள்ளியை தரம் உயர்த்துவதற்கான ரூபாய் ஒரு லட்சத்தையும் அரசுக்கு செலுத்தினார்கள். இருப்பினும் கடந்த 8 ஆண்டுகள் ஆகியும் இந்த நடுநிலை பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதி மக்கள் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வந்த அதிகாரிகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகளின் தரம் உயர்த்தியது அரசு சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதில் அரண்வாயல் குப்பம் அரசுப் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை என தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அரண்வாயல் குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுடன் கையில் அரசு உயர்நிலைப்பள்ளி வேண்டுமென பதாகைகளை ஏந்தி திடீரென சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில்  அரண்வாயல் குப்பம் பள்ளி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி, வட்டாட்சியர் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு துரை பாண்டியன் மற்றும் செவ்வாப்பேட்டை போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post அரண்வாயல் குப்பம் பகுதியில் நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி சாலை மறியல்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Aranwayal Kuppam ,Tiruvallur ,Government Panchayat Union Middle School ,Aranvayal Kuppam ,Aranwayal ,Dinakaran ,
× RELATED திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!