×

(வேலூர்) மாடு விடும் விழாவை தடுத்து நிறுத்திய விலங்குகள் நல வாரிய குழுவினர்

  • ரசிகர்கள் ஏமாற்றம்
  • காளை உரிமையாளர்கள் வாக்குவாதம்
    வேலூர் அருகே பாதுகாப்பற்ற முறையில் நடத்தியதால்

அணைக்கட்டு, ஏப். 9: பென்னாத்தூர் கிராமத்தில் பாதுகாப்பற்ற முறையில் மாடு விடும் விழா நடத்தியதால் விழாவை நிறுத்திய விலங்குகள் நல வாரிய குழுவினர் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விழாக்குழுவினர்கள், காளை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் தாலுகா பென்னாத்தூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் திருவிழா நேற்று நடந்த முடிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் விழாவுக்கு அரசு அனுமதி பெறப்பட்டு, அனைத்து துறையிலும் தடையின்மை சான்றும் பெறப்பட்டு இருந்தது. தொடர்ந்து மாடுகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மாடுகள் ஓடு பாதையில் மண் கொட்டி தயார் நிலையில் இருந்தது. விழாவில் பங்கேற்பதற்காக வேலூர், அணைக்கட்டு, ஊசூர், கணியம்பாடி, காட்பாடி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டு வாடிவாசல் பின்னால் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. அதனை தொடர்ந்து விழா காலை 9:30 மணிக்கு தொடங்க இருந்தது. முன்னதாக காலையிலிருந்து காளைகளுக்கு வழிகாட்டுதல் நடந்து கொண்டிருந்தது. இதில் சில காளைகள் உரிமையாளர்களின் பிடியிலிருந்து விலகி சீறிபாய்ந்து ஓட ஆரம்பித்தது.

இந்நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் இந்திய விலங்குகள் நலவாரிய குழு மற்றும் ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு கமிட்டி உறுப்பினருமான எஸ்.கே. மிட்டல் தலைமையில் வேலூர் கால்நடை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், உதவி இயக்குனர் அந்துவன், ஆர்டிஓ கவிதா, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர், டிஎஸ்பி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது வாடிவாசலில் இருந்து மாடுகள் ஓடி முடியும் கடைசி இடம் நெடுஞ்சாலையாக உள்ளது. தார் சாலைக்கு மாடுகள் வராதபடி மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அல்லது சாலையில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் போக்குவரத்தை மாற்றியமைக்க வேண்டும் என விழாக்குழுவினரிடம் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக நேற்று முன்தினம் ஆய்வு செய்யும்போது ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருப்பினும் அவ்வாறு செய்யாமல் தற்போது போக்குவரத்து நடந்து கொண்டிருக்கும் இந்த சாலையில் மாடுகள் வந்தால் அந்த சாலை வழியாக செல்வோருக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே மாற்று ஏற்பாடு செய்யுங்கள் அல்லது அந்த வழியாக போக்குவரத்தை மாற்றம் செய்யப்பட்டு கூடுதலாக தடுப்பு வேலிகள் அமையுங்கள் என விழாக்குழுவினரிடம் மிட்டல் தலைமையிலான குழுவினர் தெரிவித்துக்கொண்டு இருந்தனர். அப்போது தெருவில் ஓடிக்கொண்டிருந்த மாடு ஒன்று உரிமையாளர்களின் பிடியிலிருந்து விலகி இந்த குழுவினர் ஆய்வு செய்து கொண்டிருந்த அந்த சாலையிலே ஓடியது. இதை கண்ட குழுவினர், இந்த சாலையில் பாதுகாப்பற்ற முறையில் மாடுகள் செல்கிறது. எனவே இந்த வழியாக மாடுகள் செல்வதை அனுமதிக்க முடியாது. விழாவை உடனே நிறுத்துங்கள் என ஆர்டிஓவுக்கு உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து ஆர்டிஓ விழாவை நிறுத்துங்கள் என விழா குழுவினருக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர்கள், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரிடம் மக்கள் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாதபடி விழா நடத்திக் கொள்கிறோம் அனுமதியுங்கள் என தொடர்ந்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகவல் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு சென்றது. அவரும் விலங்குகள் அமைப்பு சார்ந்த குழுவினர் உத்தரவு மறுத்திருப்பதால் அனுமதிக்க முடியாது தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர். அதை தொடர்ந்து டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, கருணாகரன், மண்டல துணை தாசில்தார் உள்ளிட்டோர் விழாக்குழுவினர்கள் கிராம மக்களை அழைத்து தற்காலிகமாக தான் விழா நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதில் ஓரிரு நாட்களில் விழா நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர். பின்னர் விழா நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காளை உரிமையாளர்கள் செலுத்திய நுழைவு கட்டணம் அவர்களிடமே திரும்ப வழங்கப்பட்டது‌. தொடர்ந்து டிஎஸ்பி தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு முக்கிய இடங்களில் பேரிகார்டுகள் அமைத்து அசம்பாவிதம் எதும் நிகழாமல் தடுத்தனர். இதனால் அங்கு 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. விழாவை காண வந்த உள்ளூர் வெளியூர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

The post (வேலூர்) மாடு விடும் விழாவை தடுத்து நிறுத்திய விலங்குகள் நல வாரிய குழுவினர் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Animal Welfare Board ,Bennathur ,
× RELATED அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு...