×

நமக்கு நாமே திட்டத்தில் ₹10 கோடியில் 26 பணிகள்

சேலம், ஏப்.9: சேலம் மாநகராட்சியில், நமக்கு நாமே திட்டத்தில் ₹10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 37வது வார்டுக்கு உட்பட்ட மாரியப்பா நகரில் மழைநீர் வடிகால் மற்றும் தார்சாலை அமைக்கும் பணிகள் ₹36 லட்சம் செலவில் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதில் வாரி கார்டன் நெஸ்ட் மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹18.25 லட்சத்திற்கான காசோலையாக 50 சதவீதத்திற்கு மேலான தங்களது பங்களிப்பை மேயர் ராமச்சந்திரனிடம் வழங்கினர். அப்போது மேயர் ராமச்சந்திரன் கூறியதாவது: பொதுமக்கள் குறைந்தபட்சம் திட்டமதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்கு வழங்கினால், 2 பங்கு நிதியை அரசு வழங்கும். திட்டமதிப்பீட்டில் 50 சதவீதம் அல்லது முழு தொகையும் பங்களிப்பாளரே வழங்கினால், அப்பணியை பங்களிப்பாளரே செயல்படுத்தலாம் என்பது தான் நமக்கு நாமே திட்டமாகும். இதன் மூலம் மக்களை நேரடியாக வளர்ச்சி பணிகளில் ஈடுபடுத்துகிறோம். சேலம் மாநகராட்சியில், 2021-2022ம் நிதி ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் அரசு மானியமாக ₹2.40 கோடியும், பொதுமக்களின் பங்களிப்பாக ₹1.20 கோடியும் என மொத்தம் ₹3.60 கோடி மதிப்பில், 22 பணிகள் எடுக்கப்பட்டு 20 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 2022-2023ம் நிதியாண்டில் அரசு மானியமாக ₹4.81 கோடியும், பொதுமக்களின் பங்களிப்பாக ₹2.09 கோடியும் என ₹6.27 கோடி மதிப்பில் இதுவரை 6 பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது.இவ்வாறு மேயர் கூறினார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post நமக்கு நாமே திட்டத்தில் ₹10 கோடியில் 26 பணிகள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Corporation ,Nadu ,Ammappettai ,Dinakaran ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்