×

ரூ13 கோடி கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி நொய்டா தொழிலதிபரிடம் ரூ32 லட்சம் மோசடி செய்த சென்னை வாலிபர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் கபூர் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்திருந்தார். அதில், நான் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறேன். கொரோனா காலத்தில் எனது தொழில் சற்று நலிவடைந்தது. இதனால் தொழில் அபிவிருத்திக்காக ரூ13 கோடி தேவைப்பட்டது. அப்போது நண்பர்கள் மூலம் சென்னை ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் ஈஸ்ட் கோஸ்ட் பிராபர்ட்டிஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரும் பவன்குமார் ராஜேந்திரன் அறிமுகமானார். அவர் எனது தொழில் வளர்ச்சிக்கு பணம் உதவி செய்வதாக உறுதி அளித்தார். அதன்படி, அவர் அந்த நிறுவனத்தின் இயக்குநர் என்று டாக்டர் சலாயுதீன் என்பவரிடம் என்னை அறிமுகம் செய்தார்.

அவர் எங்கள் நிறுவனம் சார்பில் ரூ100 கோடி வரை உதவி செய்ய முடியும் என்று ஆசைவார்த்தை கூறினார். அதை நம்பி, நான் தற்போது எனக்கு ரூ13 கோடி தேவைப்படுகிறது. முதலில் ரூ5 கோடி கொடுங்கள், அதன் பிறகு மீதமுள்ள ரூ7 கோடி கடனை வாங்கி கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு அவர்கள், நீங்கள் வாங்கும் கடனுக்கு 6 மாத வட்டி முதலில் எங்களுக்கு தர வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி நான் ரூ32 லட்சம் பணத்தை கொடுத்தேன். ஆனால் அவர்கள் சொன்னபடி எனக்கு ரூ5 கோடி பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். எனவே என்னிடம் பணம் பெற்று மோசடி செய்த டாக்டர் சலாயுதீன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சந்தோஷ் வாசுதேவ், கணேஷ், ராமதாஸ், சதாம் உசேன், நசீர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்திய போது, நொய்டா தொழிலதிபரிடம் கடன் கொடுப்பதாக கூறி ரூ32 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான டாக்டர் சலாயுதீன் கூட்டாளியான சூளைமேடு மேற்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த சதாம் உசேன் (30) என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post ரூ13 கோடி கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி நொய்டா தொழிலதிபரிடம் ரூ32 லட்சம் மோசடி செய்த சென்னை வாலிபர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Noida ,Central Crime Branch ,Pankaj Kapur ,Noida, Uttar Pradesh ,Chennai Police Commissioner ,
× RELATED லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ்...