×

மகுடம் சூடிய பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

வரலாற்றில் முதன்முறையாக நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் இருவர் வெற்றிபெற்றுள்ளனர். இது அம்மாநில மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் பெண் பிரதமர், பெண் குடியரசுத் தலைவர், பெண் முதலமைச்சர்கள், பெண் அமைச்சர்கள் எனப் பலரும் பதவிகளை அலங்கரித்து வரும் சூழலில், நாகாலாந்து மாநிலத்தில் முதல்முறையாக பெண்கள் சட்டமன்ற உறுப்பினராகிறார்கள் என்பது ஆச்சரியம் தருகிறது.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாநிலமான நாகாலாந்தில், ஆணாதிக்க வட்டத்திற்குள் பெண்களின் உரிமைகள் சுருக்கப்பட்டதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் இங்கு ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். சுமார் ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 143 பெண் வாக்காளர்களை கொண்ட நாகாலாந்தில் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்க ஒரு பெண் எம்.எல்.ஏ கூட இல்லாதது வருத்தத்திற்குரிய நிகழ்வாகவே இதுவரை பார்க்கப்பட்டது.

ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி கொண்ட நாகாலாந்தில் மக்களவைக்கு ரானோ எம். ஷாய்ஷா கடந்த 1977ம் ஆண்டு தேர்வாகியிருந்தார். கடந்த ஆண்டு மாநிலங்களவைக்கு பா.ஜ.க சார்பில் ஃபாங்னான் கொன்யாக் (Phangnon Konyak) நியமிக்கப்பட்டிருந்தார். இரண்டு பெண் எம்பிக்களை கண்ட நாகாலாந்தில், பெண் எம்.எல்.ஏக்களின் வருகை மட்டும் மாநிலம் உருவாகிய 1963ம் ஆண்டில் இருந்தே கைகூடவில்லை. இந்த மாநிலத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதுவரை நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஏராளமான பெண்கள் போட்டியிட்டு உள்ளனர். ஆனால் ஒரு பெண் கூட சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.

கடந்த 2018 தேர்தலில் தேசிய மக்கள் முன்னணி கட்சி சார்பில் போட்டியிட்ட அவான் கொன்யாக் வெற்றிபெற்று மாநிலத்தில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் தோல்வியை தழுவினார். இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களுக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தன.

திரிபுராவில் கடந்த மாதம் 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது. இம்முறை 183 வேட்பாளர்களில் 4 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் ஒரு பெண் வேட்பாளரும், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் இரண்டு பெண் வேட்பாளர்களும், பாஜக சார்பில் ஒரு பெண் வேட்பாளரும் களத்தில் நின்றனர். இந்த முறை பெண்களின் குரலாக சட்டமன்றத்தில் பெண் எம்.எல்.ஏக்களின் குரல்கள் ஒலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் இருந்தது.

இந்நிலையில் முதன்முறையாக நாகாலாந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரு பெண்கள் தேர்வாகியுள்ளனர். மேற்கு அங்கமி தொகுதியில் போட்டியிட்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரை காட்டிலும் 41 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் ஹெகானி ஜகாலு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லோக் ஜன்சக்தி கட்சி வேட்பாளரை காட்டிலும் 1,536 வாக்குகள் கூடுதலாகப் பெற்று திமாபூர் மூன்றாம் தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம் இருவரும் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கின்றனர். ஹெகானி ஜகாலு தனது தேர்தல் பரப்புரையின் போது, தொழில்முனைவோர், இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், பெண்களின் உரிமைகளுக்காக போராடவும், தனது தொகுதியை முன்மாதிரியாக மாற்றவும், தனது தொகுதியின் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளின் வளர்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் உறுதியளித்தார். இந்நிலையில், தனது தேர்தல் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தவர், ‘நாகாலாந்தின் ஆணாதிக்க மனோநிலை தற்போது மாறியுள்ளது. இனி பெண்களும் அதிக அளவு அரசியலுக்கு வருவார்கள்’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

சல்ஹூதுவோனுவோ க்ரூஸ்

உள்ளூரில் ஹோட்டல் உரிமையாளர் க்ரூஸ். இவருக்காக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோவும் பிரச்சாரம் செய்தனர். ஜகாலு டெல்லி பல்கலைக்கழக பட்டதாரியாவார். இவர் சமூக செயற்பாட்டாளராகவும் இருப்பதுடன் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.

ஹெகானி ஜகாலு

48 வயதான இவர் இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் ஆகிய இரண்டிலும் பணியாற்றியவர். சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். பட்டம் பெற்றதுடன், ஹார்வர்டு பல்கலைக்கழகம், வாஷிங்டன் டி.சியில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகம் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றிருக்கிறார்.

2005ல் நாகாலாந்து திரும்பியவர், தொழிலதிபராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் திகழ்ந்த நிலையில், திம்பூர் பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் நண்பர்கள் குழுவுடன் இணைந்து யூத்நெட் என்கிற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் தொடங்கினார். இதில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பை வழங்கியதன் மூலம் அப்பகுதி மக்களின் மரியாதைக்குரிய நபராக மாறினார்.2018ல் ஹெகானி ஜகாலுவுக்கு மதிப்புமிக்க நாரி சக்தி புரஸ்கார் விருது மற்றும் 2021ல் மதிப்புமிக்க ஷ்னீடர் எலக்ட்ரிக் பிரேர்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது.

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

The post மகுடம் சூடிய பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Kumkum Dothi ,Nagaland assembly elections ,Dinakaran ,
× RELATED இயற்கை காஸ்மெடிக் பொருட்கள் தயாரிப்பில் கலக்கும் இல்லத்தரசி!