×

அழியா அழகு

பங்குனி உத்திர சேர்த்தி உற்சவம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வைணவர்களுக்கு கோயில் என்றால் திருவரங்கம் தான். 108 திவ்ய தேசங்களில் தலையாய திவ்யதேசம் திருவரங்கம். பரமபதத்தைக் கூட பாடாத ஆழ்வார்கள் உண்டு. ஆனால் திருவரங்கத்தைப் பாடாத ஆழ்வார்களே இல்லை.அதனால் இவருக்கு பதின்மர் பாடிய பெருமாள் என்று ஒரு பெயர். இராமர் வணங்கிய பெருமாள் என்பதால் பெரிய பெருமாள் என்று பெயர்.

இந்தக் கோயிலில் கிட்டத்தட்ட ஒரு சில நாட்களைத் தவிர, ஆண்டின் முன்னூறு நாட்களுக்கு மேல் ஏதேனும் ஒரு உற்சவம் இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட உற்சவங்களில் தலையாய உற்சவம் சேர்த்தி உற்சவம் . தாயருக்கும் பெருமாளுக்கும் ஏற்பட்ட ஊடலைத் தணித்து நம்மாழ்வார் சேர்த்து வைத்த சேர்த்தி உற்சவம். இந்த சேர்த்தியில் தான் ஸ்ரீராமானுஜர் சரணாகதி செய்து, சரணாகதி கத்யம் அருளிச்செய்தார்.அந்த உற்சவத்தை (5.4.23) அரங்கனின் அழகு என்கின்ற இந்தக் கட்டுரையில் திருவரங்கப் பெருமானின் அழகை ஆழ்வார்கள் எப்படி ரசித்தார்கள் என்பதை நாம் பார்க்கப் போகின்றோம். எல்லோரையும் ஈர்த்த அந்த அரங்கனின் வடிவழகு நம்மையும் ஈர்க்கும்.

கருணையே வடிவான இறைவன், உயிர்கள் உய்வடையும் பொருட்டு வேதங்களைக் கொடுத்தான், தர்ம சாத்திரங்களைக் கொடுத்தான், இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களைக் கொடுத்தான். தானே அவதரித்தான். கிருஷ்ணாவதாரத்திலே மோட்ச சாத்திரமான பகவத் கீதையைக் கொடுத்தான். தனது பஞ்சாயுதங்களையும், வேறு ஆயுதங் களையும் ஆழ்வார்களாகப் பிறப்பிக்கச் செய்தான்.இறை பக்தியிலே தோய்ந்து தோய்ந்து மண்டிக் கிடந்த அவர்கள், தமிழ் மொழியிலே, அழகானபாசுரங்களைக் கொடுத்தார்கள்.

இந்த பாசுரங்கள் எல்லாமே என்ன காட்டுகின்றன?

எம்பெருமானின் அழகு, குணங்கள். சக்தி என எம்பெருமான் விஷயமாகவே பேசுகின்றன.அதிலே எம்பெருமானின் வடிவழகை ஒரு துளி அனுபவிக்கப்போகிறோம். அவன் அழகு அழியா அழகு.அழியா அழகு என்று சொன்னாலே அழியும் அழகு என்று ஒன்று இருக்க வேண்டும். அப்படியானால் யாருடைய அழகு அழியும் அழகு? யாருடைய அழகு அழியா அழகு? நம்முடைய அழகு எல்லாம் அழியக்கூடிய அழகுதான்.

எம்பெருமான் அழகு அழியா அழகு. ஆண்டாள் அதனால்தான் அனுபவித்துப் பாடுகிறாள்.

“எழிலுடைய அம்மனையீர் என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர்/கொப்பூழில் எழுகமலப் பூவழகர் கண்ணழகர்.”

ஆனால், அரங்கனின் அழகு இருநூறு வருடங்களிலும் மாறாது. இரண்டாயிரம் வருஷங் களிலும் மாறாது. எந்த யுகங்களிலும் மாறாது. எம்பெருமான் பல நிலைகளிலே குறிப்பாக ஐந்து நிலைகளிலே இருக்கிறான். குறிப்பாக அர்ச்சாவதாரம் ஒவ்வொன்றும் அழகு தான். ஐந்து நிலைகளின் தொகுப்பாக அரங்கன் காட்சி தருகிறான். பத்து அவதாரங்களும் இவன்தான் என்று ஒரே போடாகப் போடுகிறார் பெரியாழ்வார்.

‘தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய்
அரியாய் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்…‘

அர்ச்சாவதாரம் தவிர்த்த மற்ற நான்கு நிலைகளிலேயும் உள்ள அழகை நாம் பார்க்க முடியுமா? முடியாது.

சாமானியர்களும், சம்சாரிகளுமான நம்முடைய நிலையை உணர்ந்துதான் அரங்கனே, எளியனாய் வந்து, காவிரி சூழ்பொழில் சோலைகள் நடுவிலே, கருமணியாய்த் துயில் கொண்டிருக்கிறான். இந்த குணத்தால் அவன் அழகு மேலும் நிறம் பெறுகிறது.

அதனால்தான் தொண்டரடிப்பொடியாழ்வார்,

“இச்சுவை தவிர, யான்போய், இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே” என்றார்.

திருவரங்கனின் பெருமை, எளிமை, மேன்மை, அழகு, எல்லாம் இருட்டிலே
பிரகாசிக்கும் விளக்குபோல!
அதனால்தான் ஆழ்வார்,
“அன்று கருவரங்கத்துள் கிடந்தேன்.
கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கமேயான் திசை” என்றார்.

பெருமாள் எல்லோரையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே அழகோடு காட்சி தருகிறான். இந்த அழகை நமக்குக் காட்டிக் கொடுத்தவர்கள் ஆழ்வார்கள். நாமாகப் பார்த்தால் வெறும் அழகு. ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களை வைத்துக்கொண்டு அதே எம்பெருமானை அனுபவித்தால் அதுதான் “அழியா அழகு.”இந்த அழகைத்தான் “ஐயோ! இவன் அழகென்பதோர் அழியா அழகுடையான்” என்று வர்ணிக்கிறார் கம்பர்.

திருப்பாணாழ்வார் அற்புதமாக அரங்கன் அழகை வர்ணிக்கிறார்.

“கோலமாமணி ஆரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனி! ஐயோ! நிறைகொண்டது என் நெஞ்சினையே
!”

இந்த எம்பெருமானின் அழகை பெரியவர்கள் இரண்டு விதமாக வர்ணிக்கிறார்கள். ஒன்று அவயவ அழகு! அதாவது அங்க அழகு. இரண்டாவது சமுதாய சோபை. மொத்த அழகு. அவயவ அழகை தனித்தனியாக வர்ணித்தும், மொத்த அழகை சமுதாய சோபையாக வர்ணித்தும் ஆழ்வார்கள் காட்டுகின்ற அருமையை ரசிக்கின்றோம்.இந்த அழகு சாமான்யர்களான நமக்குத் தெரியவில்லை. காரணம், நம்முடைய இயற்கையான ஞானம், சூட்சுமமான ப்ரகிருதி சேர்க்கையாலே மறைந்திருக்கிறது.

1.திருவடி

முதலில் தனது திருவடியைக் காண்பித்தான்.இங்கே ஒரு கேள்வி வரும். ஏன் திருவடியை முதலில் காட்ட வேண்டும். தன்னுடைய முழு வண்ணத்தையும் காட்டியிருக்கலாமே என்று சின்ன குழந்தை, அதற்கு முதல் முதலிலே தாய்ப்பாலைத் தான் கொடுப்பார்கள். பெரிய இலை போட்டு அலங்காரச் சாப்பாடு போடமாட்டார்கள்.அந்த குழந்தையை மார்போடு அனைத்து தாய் ஊட்டும் அந்த அமுதம்தான் அந்த சின்னஞ் சிறு உயிருக்குத் தாரகம். “தேனே மலரும்திருப்பாதம்’ என்று வர்ணிக்கிறார்.

அந்தத் திருவடிகளை நாம் மட்டுமா விரும்புகிறோம். மகாலட்சுமியும் அல்லவா விரும்புகிறாள். பரமபோக்கியமாகக் கருதி, தினசரி வருடி விடுகிறாள். தன் கண்களிலே ஒற்றிக் கொள்கிறாள். ‘மலர் மகள் விரும்பும் நம் அரும்பெறலடிகள்… ‘ என்றார் நம்மாழ்வார்.பொதுவாக தாமரை மலர்கள் சூரியனைக் கண்டால் மலரும். எம்பெருமானுடைய திருவடிகளும் தாமரை மலர்ப் பாதங்கள் என்றால், இத்திருவடித்தாமரைகள் எப்போது மலரும் ? என்றொரு கேள்வி வரும்.

தன்னை நாடி வரும் – பக்தர்களைக் கண்டால் இறைவனுடைய திருவடித் தாமரைகள் மலருமாம். ‘துயர் அறு சுடர் அடி தொழுது எழு….’ திருவடிகளை அனுபவித்த நாம் இப்போது அதற்கு மேலே பார்க்கிறோம். நாம் பார்க்கவில்லை. திருப்பாணாழ்வார் காட்டுகிறார். நாம் பார்க்கிறோம்.

2.அரைச்சிவந்த ஆடை

ஆள்பாதி ; ஆடை பாதி என்பது உலகமொழி. பீதாம்பரதாரியல்லவா அவன், ‘பீதக வாடை பிரானார் என் பிரம குருவாகி வந்து’ என்றார் பெரியாழ்வார். எம்பெருமான் விஷயத்தில், ஆளும் அழகு. அணியும் உடைகளும் அழகு.ஆண்டாளுக்கு எம்பெருமான் மீது அளவற்ற காதல். அவனோ முகம் கொடுக்கவில்லை. இவள் மேனி தளர்கிறாள். உடம்பெல்லாம் பசலைநோய் … வெந்து வெந்து உடம்பெல்லாம் வெம்மை ஏறி … தளர்ந்து போய் .. நாக்குக் குழறி….பாவம் தவியாய்த் தவிக்கிறாள்.

சுற்றி நிற்பவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போதெல்லாம் ஐசி யூ வார்டு, எமர்ஜென்ஸி வார்டு, ஆம்புலன்ஸ் எதுவும் கிடையாது. கையை பிசைந்து கொண்டு நிற்கும் உறவினர்களிடையே ஒருத்தியை அழைக்கிறாளாம் ஆண்டாள்.

இவள் போய்க் கேட்கிறாள். ‘என்ன செய்ய வேண்டும் சொல்?’ ஆண்டாள் சொல்கிறாள். ‘எனக்கு உடம்பு சரியாகப் போக வேண்டும். என் வாட்டம் தணிய வேண்டும், உன் உயிர் பிழைக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது…’ ‘சொல்லம்மா… கோதை … எங்கள் உயிரே நீதானே! உன் உயிர் தரித்தால், எங்கள் உயிரும் தரிக்கும்…’ கோதை சொல்கிறாள். பெருமான் உடுத்திக் களைந்த பீதாம்பர ஆடை இருக்கும். அதனைக் கொண்டு வந்து என்னுடைய வாட்டத்தைப் போக்க வீசுங்கள். நாச்சியார் திருமொழி இது.

“பெண்ணின் வருத்தமறியா பெருமான். அரையின் பீதகவண்ண ஆடை கொண்டு, என் வாட்டம் தணிய வீசிரே!அந்த அரைச்சிவந்த ஆடையான பட்டாடையின் எழிற்கோலத்தை இன்றைக்கும் நாம் காணலாம்.

3.உந்தி

திருவடியை பாதக் கமலம் என்கிறோம். திருவயிற்றுக்குக் கீழே இருப்பது உந்திக்கமலம்.”உள்ளத்தின் இன்னுயிரே அது” என்றார் ஆழ்வார்.உயிர் கொடுத்தால் ஜனனம். உயிர்பிரிந்தால் மரணம்.ஜனனத்துக்குக் காரணமான உந்தி (நாபி).அந்த நாபிக் கமலத்தின் மேல்தான் நான்முகன் இருக்கிறான். அந்த நான்முகன்தான் வேதங்களைக் கொண்டு உலகத்தைச் சிருஷ்டிக்கிறான்.எனவேதான், உயிராகிய உந்திக் கமலம் என்றார் ஆழ்வார்.

பெண்ணுக்கு இயல்பாக ஓர் அழகு என்றால், பிரசவித்த தாய்க்கு பேரழகு என்பார்கள். ஒரு ஜீவனைத் தந்ததால் பெண்ணுக்கு அழகு எழில் ஏறுமுகமாக இருக்கும். இங்கே உலகத்தைப் பிரசவித்தவன் இறைவன். எனவே தாய்மையின் பேரெழில் அவனுக்குச் சேர்கிறது. இந்த குணத்துக்காகவே இவனுக்கு ஒரு திருநாமம் உண்டு. பத்மநாபன். பத்மம் என்றால் கமலம் . தாமரை என்ற இன்னொரு பொருளும் உண்டு. காலத்துக்கும் பத்மம் என்று பெயர்.நூறாயிரம் கோடி கால வ்யூகம் அது.வேதம் இப்படி வர்ணிக்கிறது. காலத்தை விழுங்கிய பகவானிடமிருந்து காலம்.கமல ரூபமா ய், நாபியில் தோன்றியது, அதில் ப்ரும்மா வீற்றிருக்கிறார்.

4.வயிறு மடிப்பு

இந்த நாபிக் கமலத்திற்குப் பக்கத்திலே இடுப்பைப் பார்க்கிறார் ஆழ்வார். வயிறு மடிப்பு, அதிலே தெரியும் தழும்பு, எப்படி வந்தது இந்தத் தழும்பு?பெற்ற வயிற்றுக்குப் பட்டம் கட்டப் பிறந்த கிருஷ்ணாவதாரத்தில் தாயான யசோதை, குறும்பு செய்கிறான் கண்ணன் என்று இழுத்து வந்து, ஒரு சின்னத் தாம்புக் கயிற்றால் கட்டுகிறார். சர்வ உலகங்களிலும் வ்யாபித்து நிற்கும் பகவான். ஒரு ஆய் மகளுக்கு, (அவள் அன்புக்காக), தன் இடுப்பைக்காட்டி நின்றாள்.

அவள் கட்டினாள். இவன் கட்டுப்பட்டான், என்றால் யார் நம்புவார்கள்?அதற்குச் சாட்சியாக, அந்தக் கயிற்றுத் தழும்பை தன் இடுப்பிலே நிரந்தரமாக்கிக் கொண்டான். பகவானை யசோதையால் கட்ட முடியுமா என்ன? எனவே ஆழ்வார் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் என்றார். காரணம், அவன் பத்துடை அடியவர்க்கு எளியன், பிறர்க்கு அரிய வித்தகன், ஆழ்வார் இந்த எளிமையை நினைத்தாலே ஆறு மாதம் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார்.

“மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரலிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே!தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவை தொப்புள் கொடி உறவு என்கிறோம். வேதாந்த தேசிகர் தாமோதர தத்வம் என்கிறார். தாமோதர பந்தகம். இந்த உறவுதான் ஒழிக்க ஒழியாத உறவு.

5.திருமார்பு

இதற்கு மேலே அவனுடைய திருமார்பு. ஆத்மா நமஸ்ய ஜகதோ நர்லேப மகுணாமலம் பிபர்த்தி கௌஸ்துபமணி ஜகதோ பகவாந் ஹரி என்பது போல, சேதனா சேதனங்களையெல்லாம் தன் திருமார்பிலே கௌஸ்துப மணி முகத்தால் தரித்திருக்கிறான்.இதுகூட சிறப்பில்லை, இதற்கு மேலே இன்னொரு சிறப்பு இருக்கிறது. அது பிராட்டியைத் திருமார்பிலே வைத்திருப்பது. பிராட்டி யில்லாமல் புருஷகாரம் கிடையாது. புருஷகாரம் இல்லாமல் பெருமாள் நம்மை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.

தேவர்கள் எல்லாம் பாற்கடலைக் கடைந்தார்கள். அமுதம் கிடைத்தது. அடுத்து மகாலட்சுமித் தாயாரே வந்தாள். வந்து நேராகப் போய் பெருமான் மார்பிலே அமர்ந்து கொண்டாளாம். ‘தேவர்கள் உப்புச்சாறான கேவல அமுதத்தை ருசிபார்க்க, மகாலட்சுமித் தாயார் ஒரிஜினல் அமுதமான- ஆரா அமுதமான – எம்பெருமானின் அழகென்னும் அமுதத்தைப் பருகினான்…’

6.திருக்கழுத்து

ப்ரளயகாலத்தில் உயிர்களை எல்லாம் வயிற்றுக்குள் அடக்கவேண்டும். அதற்காக எல்லாவற்றையும் தன் வாய் வழியாக உள்ளே அனுப்புகிறான். வழி திருக்கழுத்து. அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் என்கிறார் பெரியாழ்வார்.

7.செய்யவாய்!

‘செய்யவாய்! ஐயா! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!’

ஆபத் ஸகத்துவம் – ஆபத்தில் துணையாவது
ஆபத் ரக்ஷணம் – ஆபத்தில் காப்பாற்றுவது

இரண்டுக்கும் உறுப்பு இது. இயற்கையான அழகு. அதிலே புன்முறுவல். மந்தகாசச் சிரிப்பு,சொக்க வைக்கும் சிரிப்பு. ஸ்மிர்தம்.

இறக்கும் தருவாயில் ஒரு வைணவப் பெரியார் இருந்தார்.அவர் அந்த நிலையிலும் கூட ஏதோ சிந்தனை வயப்பட்டவராக இருந்ததைப் பார்த்து பக்கத்திலிருந்தவர் கேட்டார். ‘என்ன சிந்தனை திருவுள்ளத்தில் ஓடுகிறது.?.’‘ராமாநுஜன் அடியவனான எனக்கு மோட்சம் நிச்சயம். சந்தேகமில்லை. ஆனால் அங்கே பெருமாள் எப்படி இருப்பார் என்று யோசிக்கிறேன். ஒருவேளை நம்முடைய நம்பெருமாள் போல் கஸ்தூரித் திலகமும், நாசியும், முகமும், வாய்ச்சிரிப்பும் இல்லையேல் அங்கு போயும் பயனில்லையே… அப்படி இருந்தால் அண்டச்சுவரை கிழித்துக் கொண்டு மறுபடி பூலோகத்தில் குதித்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்…’ என்றாராம்.

8.திருக்கண்கள்

கரியவாகி புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடிய நீண்ட அப்பெரியவாய கண்கள்… கண்போன்றவன் – நம்மை கண்போலக் காப்பவன். “அரவிந்தலோசனன்” என்றொரு திருநாமமும் உண்டு. “செந்தாமரைக் கண்ணா” என்று ஆழ்வார் ஆசை தீர அழைப்பதும் உண்டு. புஷ்கராக்ஷாய ; லோகி தாட்க்ஷாய என்றெல்லாம் விஷ்ணு சகஸ்ர நாமத்தில் திருநாமங்கள் வருவது உண்டு. நீண்ட அப்பெரியவாய கண்களுக்கு உரை எழுத வந்த உரையாசிரியர், இந்தக் கண்கள் ஒரு மிகப்பெரிய போரே நடத்துகின்றதாம்.

விண்ணாடாக இருந்தால் அங்கே நித்ய சூரிகளை மட்டும் பார்த்தால் போதும். ராமகிருஷ்ண அவதாரங்களாக இருந்தால், குகனையும், விபீஷணனையும், சுக்ரீவனையும், விதுரனையும்… இப்படி ஒரு சிலரை மட்டும் கருணையோடு நோக்கினால் போதும்.. ஆனால் இந்தக்கண்கள் அர்ச்சாவதாரமான அழகிய மணவாளனது திருக்கண்கள் அல்லவா!

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்களை எல்லாம் கருணையோடு நோக்க வேண்டும். இரண்டு கண்கள் போதுமா! உடம்பெல்லாம் கண்ணாகிக் காக்க வேண்டாமா! என்று கண்கள் நினைத்து நீள ஆரம்பித்ததாம். காதளவும் நீண்டு மேலே போக முடியாததால் நின்ற அப்பெரியதான கண்கள் என்று உரையாசிரியர் காட்டினார். எந்த அவயங்கள் அழகாக இருந்தாலும், கண்கள் அழகாக இல்லாவிட்டால் எந்தப் பயனும் கிடையாது.

அழகிய மணவாளப் பெருமானை திருவரங்க நாதனைச் சொல்ல வந்த ஆழ்வார் இனி சமுதாய சோபையைச் சொல்லத் துவங்குகிறார். ‘ஆலமாமரத்து இலைமேலொரு பாலகனாய்’ என்று கிருஷ்ணரை அழைக்கிறார். அந்த கண்ணன்தான் இங்கே திருவரங்கத்தில் மூலமூர்த்தியாய் எழுந்தருளியிருக்கிறான்.

ஆழ்வாரின் கண்ணுக்கு இனியனான எம்பெருமான் நம்மைப் போன்றார்க்கு எண்ணற்கு அரியான்!இப்போது நிறைவுப் பகுதியாக சிலவிஷயங்களைச் சிந்திப்போம்.இந்த அழகு ஏன் வந்தது? இது அழியா அழகா?

இந்த அழகுக்குக் காரணம் அவன் குணங்கள். குணங்கள்தான் அழகாகப் பரிணமிக்கின்றன. குணக்கேடனான ஒருவன் எத்தனை அவயவ அழகைப் பெற்றிருந்தாலும் அவனை அழகன் என்று சொல்ல மாட்டோம்.எம்பெருமானுக்கு மிடுக்கான தோற்றம் அவன் சர்வேஸ்வரன் என்கிற மேன்மையாலும், சௌந்தர்யமும், வாவண்யமும் அவனுடைய எளிமையின் பிரதிபலிப்பாகவும் வந்த அழகுகள். அடுத்தது அவன் அழகு அழியா அழகா? ஆம்!

காரணம்; எக்காலத்திலும் மாறுபாடு இல்லாதவன் அவன்; தைத்திரீய உபநிஷதம் ஸத்யம், ஞானம், அனந்தம்; ப்ரமம் என்று வர்ணிக்கிறது.இது அவனுடைய இயற்கையான ஸ்வரூபம். ஸமாய என்றொரு நாமத்தாலே அவன்வர்ணிக்கப்படுகிறான்.இதன் பொருள்; எக்காலத்துக்கும் மாறுபாடு இல்லாதவன், ஸாஸ்வதஸ்ய; ஸாஸ்வதமானவன்; அம்ருதாய நம ;ஆரா அமுதே என்றழைக்கிறார்; என் அமுதினைக் கண்ட கண்கள் என்றார் திருப்பாணாழ்வார். அமிர்தம் எக்காலத்திலும் சிரஞ்சீவித் தன்மை தரும். அழியாமையைத் தரும். தேவர்கள் உண்டார்களே அவர்கள் அழியாமையைப் பெற்றார்களா என்று ஒரு கேள்வி எழும். அவர்கள் குடித்தது அமுதம்தான்; சாதாரண அமுதம்; உப்புச்சாறு என்று வர்ணித்தார் வேதாந்த தேசிகர்; அவர்கள் அழிவின்மைக்கு அழியும் மாறுபாடும் உண்டு.

ஆனால் ஆரா அமுதமான எம்பெருமான் உயிர்களுக்குச் சாகாவரம் தந்து காப்பவன். அதனால் தான் ‘அம்ருதாய’ என்ற பதத்துக்கு உரையெழுத வந்த பராசரபட்டர் அவன் அழிவில்லாதவன் என்றொரு சாதாரணப் பொருளை எழுதாமல் சிறப்புப் பொருளாக அழியாமையைத் தருபவன் என்று எழுதினார். முக்தியை – அளித்து – மூப்பு இறப்புஅழிப்பவன், என்பது அவர் உரை. இந்த ஆழமெல்லாம் இப்போது எங்கே பார்க்கலாம் என்றால் பெரிய கோவிலிலே கண் வளர்ந்தருளுகிற பெரிய பெருமாள் பக்கலிலே பார்க்கலாம்.

கிடந்ததோர் கிடக்கைக் கண்டு எங்ஙனம் மறந்து வாழ்வன் இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்றார். இச்சுவை என்றது பெரிய பெருமாளை.ப்ரஸன்ன வதனம் மேரு பத்ம பத்ராயதேஷணம் என்று விஷ்ணுபுராணத்திலே வருகிறது.

மலர்ந்த முகம்… அவனுக்கு
அந்த அழகு அரங்கனிடத்திலே கொட்டிக் கிடக்கிறது.
தண்ணீர் பந்தல் போலே என்றார்கள் வைணவ ஆசாரியர்கள்.
தண்ணீர் பந்தலிலே யார் வேண்டுமானாலும் குடிக்கலாம்;

தாகம் வேண்டும் ; அந்தத் தாகம் இருந்தால் அரங்கனை அரங்கனின் அழகை அள்ளிப் பருகலாம்.

கடக வல்லியிலே ஒரு ஸ்லோகம்.பூர்ணமத; பூர்ணமிதம்; பூர்ணாத் பூர்ண முகச்யதே என்று வரும். திருமஞ்சனக் கட்டியத்தில் பட்டர் ஸததம் பூர்ணம் என்றார். பூர்ணமான அழகு அரங்கனின் அழகு. அமுதம் உண்டால் பசிக்காது என்பார்கள். அரங்கனின் அழகைச் சேவித்த பின்னால் வேறு எதுவும் ருசிக்காது! இது முற்றிலும் உண்மை.

தொகுப்பு: ஸ்ரீராமானுஜதாசன்

The post அழியா அழகு appeared first on Dinakaran.

Tags : Thiruvarangam ,Panguni Uthra Samdari Utsavam ,Vaishnavites ,
× RELATED மகாபிஷேகம் காணும் ஸ்ரீராகவேந்திரர்