×

திருவாரூர், திருத்துறைப்பூண்டி காரைக்குடி விரைவு ரயிலை மதுரை வரை இயக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி விரைவு ரயிலை மதுரை வரை இயக்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணி மாறன் ஆகியோர் மத்திய ரயில்வே அமைச்சர், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை ரூ.800 கோடி செலவில் அமைக்கப்பட்டு முழுமையான அளவுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் ரயில் போக்குவரத்தும், இந்த அகலரயில் பாதையில் குறைவாக உள்ளது. இயக்கப்படும் விரைவு ரயில்களும் பொதுமக்கள் விருப்பப்படி இல்லாமல், தென்னக ரயில்வே அலுவலர்களால் தன்னிச்சையாக இயக்கப்படுகிறது. பொதுமக்கள் நீண்டகால கோரிக்கையான பழம்பெரும் ரயிலான கம்பன் எக்ஸ்பிரஸ் இதுவரை இயக்கப்படவில்லை.

தற்போது திருத்துறைப்பூண்டி- திருவாரூர்- காரைக்குடிக்கு விரைவு ரயில் காலை மாலையில் இயக்கப்படுகிறது. பயணிகள் அதிகமாக பயணம் செய்து மிகவும் லாபகரமாக செயல்படுவதாக ரயில்வே நிபுணர்களின் கமிட்டியின் பொருளாதார அறிக்கை தெரிவிக்கிறது. ரயில் காலை 11 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை காரைக்குடியில் 5 மணி நேரம் வெயிலில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை காரைக்குடியில் இருந்து மதுரை வரை ரயில்வே நிர்வாகம் இயக்கினால் மிக அதிக லாபம் கிடைக்கும். ரயில் ஓய்வாகக் கிடக்கும் நேரத்தை லாப நோக்குடன் உபயோகப்படுத்தலாம். திருத்துறைப்பூண்டியிலிருந்து மதுரைக்கு வியாபாரிகள், மாணவ, மாணவிகள் ஆன்மீகவாதிகள் மற்றும் கண் சிகிச்சை செய்ய செல்லும் நோயாளிகள் ஆகியோர் விரைவுரயிலில் மதுரைக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர். மதுரைக்கு செல்ல வேறு ரயில்களும் இப்பாதையில் இருந்து இயக்கபடுவதில்லை. மேலும் திருத்துறைப்பூண்டி, காரைக்குடி வழியே மதுரைக்கு இந்த அகலரயில் பாதையில் சென்றால் பயண நேரமும் பயண தூரம் மற்றும் எரிபொருள் செலவு ஆகியவை மிகவும் குறையும் . திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வியாபாரிகள் சங்கங்களும் ரயில் பயணிகளும் திருவாரூர் காரைக்குடி ரயிலை திருத்துறைப்பூண்டி வழியாக வேண்டும். மேலும் திருவாரூர், காரைக்குடி விரைவு வண்டியை பொருளாதார நோக்கம் பயணிகளின் பயன்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மதுரை வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.




Tags : Tiruvarur ,Thirutharapoondi Karaikudi ,Madurai ,
× RELATED வலங்கைமானில் பத்தாம் வகுப்பு...