×

குப்பைக் கிடங்கு தீயை அணைக்கும் பணி தீவிரம் நகராட்சித் தலைவர் நேரடி ஆய்வு திருவண்ணாமலையில் தொடர்ந்து 2வது நாளாக

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி குப்பைக் கிடங்கில் தொடர்ந்து நேற்றும் 2வது நாளாக தீப்பற்றி எரிந்ததால், அதனை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதனை, நகராட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார். திருவண்ணாமலை கிரிவலப்பதையில் ஈசான்ய மயானம் அருகே, நகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குப்பைக் கழிவுகள் மலை போல குவிந்திருக்கிறது. அதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகின்றன. அந்த வழியாக கடந்துசெல்வோர் கடும் அவதிப்படுகின்றனர்.  திருவண்ணாமலை நகரின் முக்கிய குடியிருப்பு பகுதியில், பள்ளி மற்றும் பஸ்நிலைத்துக்கு அருகே அமைந்துள்ள இந்த குப்பைக் கிடங்கை நகரின் ஒதுக்குப்புறமாக மாற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. மேலும், கிரிவலப்பாதையில் ஈசான்ய லிங்க சன்னதிக்கு அருகே குப்பைக் கிடங்கு அமைந்திருப்பதால், பக்தர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நகராட்சி குப்பைக் கிடங்கு நேற்று முன்தினம் தீப்பற்றி எரிந்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீயால், அந்த சுற்றுவட்டார பகுதியே புகை மண்டலமாக மாறியது. ஈசான்யம் பகுதி தொடங்கி, பஸ் நிலையம் வரை குப்பைக் கிடங்கின் நச்சுப்புகை பரவியது. இதனால், பொதுமக்கள் மூச்சுத்திணறலால் கடும் அவதிப்பட்டனர். குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் ஓரளவுக்கு தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும், சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் குவிந்திருக்கும் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை முற்றிலுமாக கட்டுப்படுத்துவது சவாலாக மாறியது.  ஒரு பகுதியில் தீயை அணைத்தாலும், மற்றொரு பகுதியில் தீப்பற்றி எரிந்தது. எனவே, தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் குப்பைக் கிடங்கு எரிந்தது. அதைத்தொடர்ந்து, நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன், நகராட்சி ஆணையாளர் முருகேசன் ஆகிேயார் நேற்று நேரில் பார்வையிட்டனர். குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.

அப்போது, நகராட்சித் துணைத் தலைவர் சு.ராஜாங்கம், தூய்மை அருணை மேற்பார்வையாளர் ப.கார்த்திவேல்மாறன், நகராட்சி கவுன்சிலர் கோவிந்தன், துப்புறவு ஆய்வாளர் மால்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடந்தது. மேலும், நகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டன. ஒட்டுமொத்த நகராட்சி ஊழியர்களும் களம் இறக்கப்பட்டனர். தீயை அணைக்கும் முயற்சி தொடர்ந்து பல மணி நேரம் நீடித்தது. அதன்பிறகு, ஓரளவுக்கு தீ கட்டுக்குள் வந்தது. ஆனாலும், குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை படிப்படியாக குறையத் ெதாடங்கியது. கேப்சன்

Tags : Thiruvannamalai ,Municipal Chairman ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...