×

தூத்துக்குடியில் திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை சப்-கலெக்டர் விசாரணை


தூத்துக்குடி, மார்ச் 12: தூத்துக்குடியில் திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ரொமிங்டன், மீனவர் இவரது மனைவி ஜேசு திலகா(26). இவர்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி திருமணம் நடந்தது. தற்போது ஜேசு திலகா, 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜேசு திலகா, சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, ஜேசு திலகாவின் தாயார் செல்வம், தாளமுத்துநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளார்.
ஜேசு திலகாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் சப்-கலெக்டர் கவுரவ்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று, கடந்த ஜனவரி மாதம் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 7வது தெருவை சேர்ந்த பிரசாத் என்பவரது மனைவி அனிஷா(25) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கிலும், அப்பெண்ணின் உறவினர்கள் அனிஷா தற்கொலை செய்வதற்கு வாய்ப்பில்லை. அவர் மர்மமான முறையிலேயே இறந்துள்ளார். எனவே இது தற்கொலை அல்ல, கொலை தான் எனவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யும்வரை உடலை வாங்கப்போவதில்லை எனவும் தெரிவித்து சில தினங்கள் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் மற்றும் சப் கலெக்டர் விசாரணை நடத்தினர். இந்த தற்கொலை வழக்கிலும் இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும்