பண்ருட்டி அருகே சங்க கால அகல் விளக்குகள் கண்டெடுப்பு

பண்ருட்டி, மார்ச் 4: பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுடு மண்ணாலான கருப்பு நிறம் மற்றும் சிவப்பு நிறத்திலான அகல்விளக்கை கண்டறிந்தனர். இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகையில், எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கண்டறியப்பட்ட சுடுமண் அகல்விளக்குகள், ஒன்று தட்டு வடிவில் நான்கு திரிகளை கொண்டதாகவும், இரண்டாவது விளக்கு கருப்பு நிறத்தில் ஒற்றைத் திரியுடன் பாதி உடைந்த நிலையில் அழகிய கலைநயத்துடனும், மூன்றாவது விளக்கு கலைநயத்துடன் உடைந்த நிலையில் சிவப்பு நிறத்தில் ஒற்றை திரியுடன் காணப்படுகிறது. இந்த விளக்குகள் சங்ககாலத்தை சேர்ந்ததாகும்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனிதன் நெருப்பின் அவசியத்தை அறிந்திருந்தான். நாகரிகம் அடைந்த பிறகு புதிய கற்காலத்தில் ஓர் இடத்தில் தங்கி வாழ ஆரம்பித்தான். அப்போது அவனுக்கு விளக்கு அவசியமாக இருந்தது. எனவே அவன் ஈரமான களிமண்ணை எடுத்து கைவிரலால் சற்று குழியாக செய்து சிறிய விளக்குகள் போல செய்து பயன்படுத்திக் கொண்டான். தமிழகத்தில் பையம்பள்ளி, மோதூர், அப்புகல்லு ஆகிய இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வில் கையால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் கண்டறியப்பட்டது. மதுரை கீழடி, ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு,  வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் சுடுமண் அகல்விளக்குகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கண்டறியப்பட்ட அகல் விளக்குகள் கீழடி மற்றும் அரிக்கமேடு பகுதி அகழ்வாய்வுகளில் கண்டறிந்த அகல் விளக்குகளோடு ஒற்றுபோகிறது. இதனால் பழங்கால மக்கள் தென்பெண்ணையாற்றங்கரை பகுதிகளிலும் வாழ்ந்து உள்ளதை அறிய முடிகிறது, என்றனர்.

Related Stories: