×

நெல்லையப்பர் கோயிலில் மார்ச் 6ல் மாசி மக அப்பர் தெப்ப உற்சவம்

நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் மாசி மகத்தையொட்டி மார்ச் 6ம் தேதி இரவு பொற்றாமரை குளத்தில் மின்னொளியில் அப்பர் தெப்ப உற்சவம் நடக்கிறது. ‘‘முன்னொரு காலத்தில் சைவ, சமண சமயத்திற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமண மதத்தினர்கள், சைவ சமயக்குறவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியை பரிசோதிக்கும்  வகையில் அவரை கல்லில் கட்டி கடலில் விட்டனர். அப்போது அப்பர் பெருமான் ‘‘கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயமே’’ என சிவபெருமானை நினைத்து பாடினார்.

அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. இந்த தெப்ப உற்சவத்தின் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார். இத்தகைய வரலாற்றுச் சிறப்பை நினைவு கூறும் வகையில் அப்பர் தெப்ப உற்சவம், மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நெல்லையப்பர் கோயிலில் மாசிமக அப்பர் தெப்ப உற்சவம், மார்ச் 6ம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் சன்னதி பொற்றாமரை குளத்தில் நடக்கிறது.

இதையொட்டி பொற்றாமரை குளத்தில் உள்ள நீராழி மண்டபம், தெப்பத்தை சுற்றிலும் மின்னொளியால் அலங்கரிக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அப்பர் பொற்றாமரை குளத்தின் கரையில் உள்ள விநாயகரை தரிசனம் செய்யும் வைபவம் நடைபெறுகிறது. இதையடுத்து சமணர்கள் அப்பர் சுவாமிக்கு பாயாசத்தில் விஷம் கலந்து கொடுத்தல், சுண்ணாம்பு காளவாசலில் நீத்துதல், மதம் பிடித்த யானையை வைத்து மிதிக்க வைத்தல் போன்ற வைபவங்கள் தொடர்ந்து நடைபெறும்.

பின்னர் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட பொற்றாமரை குளத்தில் உரலால் கட்டப்பட்ட அப்பர்பெருமானை வீசும் வைபவம் (கல்லை கட்டி கடலில் வீசும் வைபவம்)  நடைபெறும். இதில் அப்பர் பெருமான் தெப்பத்தில் 11 முறை வலம் வரும் வைபவம் நடைபெறும். தொடர்ந்து பொற்றாமரை குளத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், ஷோடச தீபாராதனையும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

Tags : Masi Maha ,Nellayapar Temple ,
× RELATED நெல்லையப்பர் கோயிலின் சந்திர...