×

புதுச்சேரியில் பரிதாபம் சிறுவன் ஓட்டிய பைக் மோதி ஓட்டல் மேலாளர் சாவு

புதுச்சேரி,  பிப். 26:  புதுச்சேரியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் மோதி மரக்காணத்தை  சேர்ந்த ஓட்டல் மேலாளர் தலையில் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார்.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனிமேடு முதலியார்குப்பத்தில்  வசித்தவர் பிரதாபன் (33). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி  வினோதினி (26) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பிரதாபன்  புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள ஒரு பிரபல ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு ேவலையை முடித்த இவர்  நள்ளிரவு 11.15 மணியளவில் அங்கிருந்து வழக்கம்போல் தனது பைக்கில்  வீட்டுக்கு புறப்பட்டார்.

முத்தியால்பேட்டை மார்க்கெட்   ஒட்டியுள்ள ஒரு ஏடிஎம் சென்டர் அருகே வந்தபோது, எதிரே வேகமாக வந்த மற்றொரு  பைக், அவர் மீது கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பிரதாபன் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு தலையில்  படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர் சம்பவ  இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மற்றொரு பைக்கை ஓட்டி வந்த நபர், லேசான  காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மீட்டு அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி  கிழக்கு டிராபிக் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எஸ்ஐ குமார்,  ஏட்டு ஏழுமலை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று,  ஓட்டல் மேலாளர் பிரதாபன் உடலை மீட்டு கதிர்காமத்துக்கு அனுப்பி வைத்தனர்.  இதுதொடர்பாக அவரது மனைவி வினோதினியிடம் புகாரை பெற்ற போலீசார்  வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். இதில் எதிர்முனையில் பைக் ஓட்டிவந்தவர்  16 வயது சிறுவன் என்பது தெரியவந்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Tags : Puducherry ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை