×

(வேலூர்) இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்த 500 காளைகள் 98 காளைகளுக்கு பரிசு வல்லண்டராமம், கழனிப்பாக்கத்தில் மாடுவிடும் திருவிழா



பள்ளிகொண்டா, பிப்.25: பள்ளிகொண்டா அடுத்த வல்லண்டராமம், கழனிப்பாக்கம் கிராமங்களில் இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்த 500 காளைகளை உற்சாகத்துடன் கண்டு களித்தனர். இலக்கிணை கடந்த 98 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வல்லண்டராமம் கிராமத்தில் பொற்கொடி அம்மன் கோயில் திருவிழாவினை முன்னிட்டு நேற்று மாடுவிடும் விழா நடந்தது. அணைக்கட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென்காந்தி தலைமையில் பாதுகாப்பு உறுதிமொழியினை எடுத்து கொண்டனர். காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசல் வழியாக காளைகள் கட்டவிழ்த்து விட்டப்பட்டது. விழாவில் இளைஞர்களின் மத்தியில் திமிலை மிடுக்கியபடி காளைகள் இலக்கினை கடந்தன.

அப்போது இளைஞர்கள் கூட்டம் விசிலடித்தும், அதிவேகமாக சென்ற காளைகளை பார்வையாளர்கள் கைதட்டி கரகோஷங்கள் எழுப்பியும் உற்சாகப்படுத்தினர். காளைகளின் கயிறு சிக்கி இளைஞர்கள் அந்தரத்தில் பறந்தனர். 250 காளைகள் பங்கேற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை குறைந்த வினாடியில் கடந்த காளைக்கு முதல் பரிசாக ₹55,000, இரண்டாம் பரிசாக ₹40,000, மூன்றாவதாக இலக்கை அடைந்த காளைக்கு ₹30,000 என மொத்தம் 43 பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், காளைகளின் ஓட்டத்தில் சிக்கி படுகாயமடைந்த 25 பேருக்கு அணைக்கட்டு வட்டார மருத்துவர் தலைமையில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சைனலதா மணி, துணைத்தலைவர் பிரீத்தி வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதேபோல், கழனிப்பாக்கம் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மாடுவிடும் திருவிழா நேற்று நடைபெற்றது. அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் மற்றும் விழாவிற்கான பாதுகாப்பு உறுதிமொழியினை எடுத்து கொண்டனர். வாடிவாசல் வழியாக காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 250க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றதில் மிக குறைந்த வினாடியில் இலக்கினை கடந்த காளைக்கு முதல் பரிசாக ₹60,001, இரண்டாவது பரிசாக ₹50,001, மூன்றாவதாக வென்ற காளைக்கு ₹40,001 என அடுத்தடுத்த இலக்கினை பெற்ற 55 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விழாவையொட்டி டிஎஸ்பி திருநாவுக்கரசு இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், பழநிமுத்து, பார்த்தசாரதி உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Vellore ,Vallandaram ,cow ,Kalanippakkam ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...