×

தொண்டியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, ரவுண்டானா அமைக்க கோரிக்கை

தொண்டி,  பிப். 25: தொண்டியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் இரு இடங்களில் ரவுண்டா அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டியை மையமாக வைத்து 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்  உள்ளன. இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தொண்டியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பணிமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வதும், பின்னர் சில காரணங்களால் அதனை நிராகரிக்கப்பதுமாக அதிகாரிகளின் நடவடிக்கை தொடர்கதையாக உள்ளது. இங்கு பணிமனை இல்லாததால் இரவு நேரத்தில் போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் வெளியூர்களில் இருந்து இயக்கப்படுவதில்லை. திருவாடானையில் இருந்து இரவில் குறிப்பிட்ட  நேரத்திற்கு பின் பஸ்கள் இல்லாததால் ஏதேனும் வேலையாக அங்கு சென்றவர்கள் திரும்ப வர முடியாமல் இரவு முழுவதும் தவிக்கும் நிலை தொடர்கிறது எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் போக்குவரத்துக்கழக பணிமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், தொண்டி நகரின் வளர்ச்சிக்கு தகுந்த வகையில் வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இங்குள்ள பழைய பேருந்து நிலையத்தின் செக்போஸ்ட் பகுதி மற்றும் வட்டாணம் ரோடு ஆகியவை மும்முனை சந்திப்பு பகுதிகளாக உள்ளன. இதனால் இப்பகுதிகளில் எப்போதும் வாகன போக்குவரத்து பரபரப்புடன் காணப்படும். அத்துடன் எதிரே வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி  விபத்துகளும் நடக்கிறது. மேலும் அந்த பகுதியில் போதிய எண்ணிக்கையில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துகளும் அதிகம் நடக்கிறது. எனவேள இந்த முச்சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் கூறும்போது, தொண்டியில் அரசு போக்குவரத்துக்கழக  பணிமனை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. இதனை  நிறைவேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தொண்டி - மதுரை - ராமேஸ்வரம் மும்முனை சந்திப்பான பழைய பேருந்து நிலையத்தின் செக்போஸ்ட் பகுதி மற்றும் பட்டுக்கோட்டை - கடற்கரை சாலை சந்திப்பான வட்டாணம் ரோடு பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. எதிரே வரும் வாகனம் தெரியாமல் பலரும் செல்வதால் விபத்து நடக்கிறது. எனவே, விபத்துகளை தடுக்க இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்றனர்.

Tags : Government Transport Corporation Workshop ,Roundabout ,Thondi ,
× RELATED லாரி மோதி பஸ் கவிழ்ந்ததில் 3 பேர் பலி