×

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளை கயத்தாறில் திறப்பு யூனியன் சேர்மன் மாணிக்கராஜா திறந்துவைத்தார்

கயத்தாறு,பிப்.24: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய 516வது கிளையை கயத்தாறில் யூனியன் சேர்மன் மாணிக்கராஜா திறந்துவைத்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் புதிதாக  6 கிளைகள் தமிழகத்திலும், ஒரு கிளை ஆந்திர மாநிலத்திலும் நேற்று  திறக்கப்பட்டது. அதன்படி நெல்லை மாவட்டம் பரப்பாடி, திண்டுக்கல்  ஆ.எம்.காலனி, நெல்லை தச்சநல்லூர், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கடலூர்  மாவட்டம் வேப்பூர், விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு மற்றும் ஆந்திர  மாநிலம் சித்தூர் உள்பட 7 புதிய கிளைகளின் திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 516வது கிளையின் திறப்பு விழாவுக்கு வங்கியின் மண்டல மேலாளர் சுந்தரேஷ்குமார் தலைமை வகித்தார். அரிமா சங்கத்தலைவர் மாரியப்பன், கயத்தாறு நகர அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் கொண்டல்சாமி முன்னிலை வகித்தனர். கயத்தாறு கிளை மேலாளர் மகாலட்சுமி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கயத்தாறு யூனியன் சேர்மன் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா புதிய கிளையை திறந்துவைத்து குத்து விளக்கேற்றினார். இதைத்தொடர்ந்து வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையை அரிமா சங்கத்தலைவர் மாரியப்பன் திறந்துவைத்தார். கணினி சேவையை கடம்பூர் ஹரிசந்திரா ஜின்னிங் பேக்டரி இயக்குநர் குடியரசு துவக்கிவைத்தார்.

விழாவில் வியாபாரிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், ஊர் மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதே போல் நெல்லை தச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 515வது புதிய கிளை திறப்பு விழாவிற்கு வங்கியின் மண்டல மேலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொது மேலாளர் இன்பமணி முன்னிலை வகித்தார். நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜு, புதிய கிளையை திறந்துவைத்து பேசினார். இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை ரேவதி குத்துவிளக்கு ஏற்றினார். தச்சநல்லூர் அரசன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சந்தான கோபாலகிருஷ்ணன், பாதுகாப்பு பெட்டகத்தை திறந்துவைத்தார். தச்சநல்லூர் நகர வியாபாரிகள் சங்கத்தலைவர் கண்ணன், வங்கியின் கணினி இயக்கத்தையும், காமராஜர் பள்ளித் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஆர்எம்யையும் துவக்கிவைத்தனர். இதில் நெல்லை மாநகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலர் டாக்டர் சங்கர், தச்சநல்லூர் பகுதி வியாபாரிகள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிளை பொறுப்பாளர் சுதீன் நன்றி கூறினார்.

Tags : Tamil Nadu Mercantile Bank ,Kayathar ,Union Chairman ,Manikaraja ,
× RELATED தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின்...