×

(தி.மலை) தாலுகா அலுவலகத்தில் சிதறி உடைந்த டைல்ஸ் அரசு அலுவலர்கள் மக்கள் பீதி கீழ்பென்னாத்தூரில் நில நடுக்கமா?

கீழ்பென்னாத்தூர், பிப்.23: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை ‘டமார்’ என்ற சத்தத்துடன் டைல்ஸ்கள் பெயர்ந்து விழுந்தன. நில அதிர்வு காரணமாக இருக்குமா? என்ற அச்சத்துடன் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். துருக்கியில் கடந்த 6ந் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சுற்றிலும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான நில அதிர்வுகள் பதிவாகி உள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கியை தொடர்ந்து ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

சென்னையிலும் நில நடுக்கம் ஏற்படக் கூடும் என புவியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதன்படி நேற்று காலை சென்னை அண்ணாசாலையில் கட்டிடங்களிலும், சில பகுதிகளிலும் நில அதிர்வினால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் கட்டிடங்களில் இருந்தவர்கள் அச்சத்துடன் வெளியேறினர். இதேபோல் நேபாளத்திலும், டெல்லியிலும், இலங்கையிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூரில் தாலுகா அலுவலகத்தில் தரையில் பதியப்பட்டிருந்த டைல்ஸ்கள் ‘டமார்’ என்ற சத்தத்துடன் பெயர்ந்தது சிதறியது. கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு புதியதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. முதல் மாடியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் தரை முழுவதும் டைல்ஸ்களால் பதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை அந்த அலுவலகத்தில் ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். பொதுமக்களும் இருந்தனர்.
அப்போது மாலை 4.55 மணியளவில் முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் வெடி வெடிப்பது போல் ‘டமார்’ என சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் முதல்மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது தரை விரிசல் விட்டு டைல்ஸ்கள் பெயர்ந்து சிதறி கிடந்தன.

இதனால் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் அலறியடித்துக் கொண்டு அலுவலர்களும், ஊழியர்களும் உடனடியாக வெளியேறினர். சென்னையில் ஏற்பட்டது போல் இங்கும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கும் என அச்சத்துடன் அவர்கள் இருந்தனர். இதுகுறித்து தாசில்தார் சாப்ஜான் நம்மிடம் கூறுகையில், ‘இச்சம்வம் நடைபெற்ற போது நான் அங்கு இல்லை. கலெக்டர் அலுவலகத்தில் மீட்டிங்கில் இருந்தேன். அக்கம்-பக்கம் எங்கும் இந்த மாதிரி நடைபெறவில்லை. தாலுகா அலுவலக முதல்மாடியில் மட்டும் நடந்துள்ளது. பொதுவாக டைல்ஸ்கள் விரிசல் விடும், ஆனால் சத்தத்துடன் பெயராது. எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறைக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். அவர்கள் நாளை(இன்று) வந்து ஆய்வு செய்ய உள்ளனர்’ என்றார். தாலுகா அலுவலகத்தில் வெடி சத்தம் போன்று டைல்ஸ்கள் பெயர்ந்த சம்பவம் வருவாய்த்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பீதி ஏற்படுத்தி உள்ளது. மேலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படும் சம்பவத்தால் என்ன நடக்கும் என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.

Tags : Th. Malai ,Kilpennathur ,
× RELATED (தி.மலை) தலைமறைவாக இருந்த உறவினர்கள் 3...