×

(தி.மலை) அனைத்து ஏடிஎம் மையங்களிலும் இரவு காவலர் நியமனம் பாதுகாப்பில்லாத ஏடிஎம்களை இரவில் மூட உத்தரவு திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, பிப்.22: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வங்கி அதிகாரிகளுடனான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. எஸ்பி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன், ஆர்டிஓ மந்தாகினி, வேளாண் இணை இயக்குனர் ஹரகுமார், தாட்கோ மாவட்ட மேலாளர் ஏழுமலை மற்றும் பல்வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு, தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை வங்கிகளின் 389 ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட்டு வருகிறது. அனைத்து வங்கி மேலாளர்களும் ஏடிஎம் மைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு பாதுகாப்பு சிலிண்டர் கட்டாயமாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஏடிஎம் மையத்திலும் இரவு காவலர்களை கட்டாயமாக பணியில் ஈடுபடுத்த வேண்டும். பணியில் ஈடுபடும் இரவு காவலர்களின் பணி வருகையை வங்கி மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல், ஏடிஎம்களில் மின்விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் அபாய எச்சரிக்கை மணி ஆகியவற்றை அவ்வப்போது வங்கியாளர்கள் சோதனை செய்வது அவசியம். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவுறுத்தலின்படி, பாதுகாப்பு குறைவு என கருதப்படும் ஏடிஎம் மையங்களை, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பூட்டி வைக்க வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து, தாட்கோ கடன், மகளிர் குழு கடன், பட்டுப்புழு வளர்ப்பு கடன், கைத்தறிக்கடன், வேளாண்மை விற்பனைத்துறை, வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் கிசான் அட்டை, மாவட்ட தொழில் மையத்தில் செயல்படும் திட்டங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு மானிய திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

Tags : T.Malaya ,Tiruvannamalai district ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி...