×

குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம வழக்கு கூடுதல் ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் கைதான 9 பேரையும் காவலில் எடுக்க முடிவு

விழுப்புரம், பிப். 22: குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை நேற்று முதல் சிபிசிஐடி எஸ்பி அருண்கோபாலன் தலைமையிலான போலீசார் துவங்கியுள்ளனர். கூடுதல் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவலை எஸ்பி தெரிவித்தார். ேகரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின்பேபி. இவர் கடந்த 2004ம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்புஜோதி என்ற பெயரில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா என்பவர் காணாமல் போன நிலையில் உறவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். ஆசிரமத்தில் போலீசார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி இயங்கியதும், பலர் காணாமல் போனதும், மனவளர்ச்சி குன்றிய பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து கெடார் காவல் நிலைய போலீசார் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி அவரது மனைவி மரியா உள்ளிட்ட 9 பேர் மீது 13 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணையில் கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ஆசிரமங்களுக்கும் பணத்துக்காக மனவளர்ச்சி குன்றியவர்களை ஜூபின்பேபி அனுப்பி வைத்தது தெரியவந்தது.  

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கை கடந்த 18ம் தேதி சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் செஞ்சி போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை எஸ்பி அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் இடம்  ஒப்படைத்தனர். அன்று மாலையே விசாரணையை துவங்கினர். சிபிசிஐடி எஸ்பி அருண்பாலகோபாலன் தலைமையில் கூடுதல் எஸ்பி கோமதி உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினரும், தடயஅறிவியல் உதவி இயக்குநர் சண்முகம் தலைமையிலான போலீசாரும் நேற்று குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் ஆசிரமத்தின் அருகில் கொட்டப்பட்ட மருந்துகள், மாத்திரைகளை கைப்பற்றி சோதனைக்காக ஆய்வகத்துக்கு கொண்டு சென்றனர். ேமலும் அங்கு சந்தேகத்துக்கிடமாக கிடந்த பொருட்களையும் கைப்பற்றி ேசாதனைக்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே ஆசிரமத்தில் சுமார் 3 மணி நேரமாக சிபிசிஐடி எஸ்பி அருண்பாலகோபாலன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். ஏற்கனவே கெடார் போலீசார் சோதனை நடத்தி கைப்பற்றி கொடுத்த ஆவணங்களையும் வைத்து அங்கு சோதனையில் ஈடுபட்டனர். ஆசிரமத்தின் அருகில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இச்சோதனைக்கு பின் முக்கிய ஆதாரங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோரை கட்டிப்போட பயன்படுத்தப்பட்ட இரும்பு சங்கிலிகள், அடிக்க பயன்படுத்தப்பட்ட மூங்கில் பிரம்பு கழிகள், ரத்தம் படிந்த பாய், உடுத்திய துணிகள்  மற்றும் மருந்து பொருட்களை கைப்பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

சோதனைக்குப்பிறகு சிபிசிஐடி எஸ்பி அருண்பாலகோபாலன் கூறுகையில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி உத்தரவின்படி ஆசிரமம் தொடர்பாக கெடார் காவல் நிலையத்தில் பதியப்பட்ட  மொத்த வழக்குகளில் 4 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வழக்குகளில் புதியதாக நேற்று  எப்.ஐ.ஆர் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை  தொடங்கியுள்ளோம். குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது, என்றார். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற உள்ளனர். அதனைத்தொடர்ந்து, வெளிமாநில காப்பகத்துக்கும் சென்று விசாரணை நடத்த உள்ளனர். முன்னதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணைக்குப்பிறகு வெளி மாநிலங்களுக்கு இதுவரை எத்தனை பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக எவ்வளவு பணம் வாங்கினார்கள். பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் விவரம் தெரியவரும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Kundalappuliyur Anbujyothi Ashram ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை