×

திருப்பூரில் டைமிங் பிரச்னை அரசு பஸ்சை உரசி சென்ற தனியார் பஸ் : பீதியடைந்த பயணிகள்

திருப்பூர், பிப்.21: திருப்பூரில் டைமிங் பிரச்னை காரணமாக அரசு பஸ் டிரைவருக்கும், தனியார் பஸ் டிரைவருக்கும் ஏற்பட்ட தகராறில், அரசு பஸ்சை உரசியபடி முந்திச் சென்ற தனியார் பஸ் டிரைவரின் செயலால் பயணிகள் பீதியடைந்தனர். திருப்பூர் மாநகருக்கு உட்பட்ட பகுதியில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையங்களில் இருந்து மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களுக்கும் அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தனியார் பஸ் டிரைவர்களுக்கும், அரசு பஸ் டிரைவர்களுக்கும் இடையே அவ்வப்போது பஸ்களை இயக்குவது குறித்த நேரப்பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்படுவது உண்டு. இந்நிலையில் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1 மணியளவில் அவிநாசிக்கு அரசு டவுன் பஸ் (எண்:100) ஒன்று புறப்பட தயாராக நின்றது. அப்போது பின்னால் நின்றிருந்த தனியார் டவுன் பஸ் (எண்:20) ஒன்று, அரசு பஸ்சை முந்தி அவிநாசிக்கு புறப்பட தயாரானது.

இதை பார்த்த அரசு பஸ் டிரைவர், தனியார் பஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தனியார் பஸ்சுக்கு வழி விடாமல், பஸ்சை குறுக்காக நிறுத்தினார். இதனால் மற்ற பஸ்களும், பஸ் நிலையத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதை பார்த்த மற்ற பஸ்களின் டிரைவர்கள் ஹாரன்களை அடித்தனர். இதனால் பஸ் நிலையத்தில் ஹாரன் சத்தமாக இருந்தது. வேறு வழியின்றி அரசு பஸ் டிரைவர் பஸ்சை அங்கிருந்து எடுத்தார். தனியார் பஸ்சும் பின்னால் வந்தது. பலமுறை அரசு பஸ்சை முந்த, தனியார் பஸ் டிரைவர் முயற்சி செய்தார்.

 இதனால் இருமுறை பஸ்கள் லேசாக உரசும் நிலை ஏற்பட்டது. இதை பார்்த்த இரு பஸ்களில் இருந்த பயணிகளும் பீதியடைந்தனர். ரயில் நிலையம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, வேகமாக வந்த தனியார் பஸ், லேசாக உரசியபடி, அரசு பஸ்சை முந்தி பஸ் ஸ்டாப் அருகே நடுரோட்டில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றியது.

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அரசு பஸ் டிரைவர் தனியார் பஸ்சுக்கு முன்னாள் பஸ்சை குறுக்காக நிறுத்தி தனியார் பஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக பின்னால் வந்த வாகனங்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பயணிகளும், மற்ற பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இருவரையும் சமாதானம் செய்து, பஸ்சை எடுக்கும்படி வலியறுத்தினர். இதன் பின்னரே பஸ்கள் அங்கிருந்து புறப்பட்டது. இதுகுறித்து அரசு பஸ் கண்டக்டர் கூறுகையில், பழைய பஸ் நிலையத்தில் இருந்து சரியாக 1 மணிக்கு நாங்கள் புறப்பட வேண்டும். அதன்படி புறப்பட நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் 1.10-க்கு எடுக்க வேண்டிய தனியார் பஸ், எங்கள் ேநரத்திற்கு புறப்பட்டதால் இந்த பிரச்னை ஏற்பட்டது, என்றார்.

Tags : Tirupur ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து