×

ரவுடியை ஜாமீனில் விடுவிக்க லஞ்சம் வாங்கிய குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

குறிஞ்சிப்பாடி, செப். 23:  கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சமுட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் மகன் காந்த் (40). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் காந்த்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தார். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடற்தகுதி சான்றிதழ் பெற அழைத்து வந்தார். ஆனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாததால், உடற்தகுதி சான்றிதழை டாக்டர் வழங்கவில்லை.

 இதையடுத்து அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் சொந்த ஜாமீனில் விடுவித்தார். பின்னர் ஜாமீனில் விடுவித்ததற்காக காந்த்திடம் கடந்த 18ம் தேதி இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். அப்போது அங்கு மறைந்து நின்று கண்காணித்த கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை