மருத்துவ இணை இயக்குனர் தலைமையில் சென்றனர் அதிகாரிகள் ரெய்டு வருவதை அறிந்து போலி டாக்டர்கள் தப்பி ஓட்டம் ஒடுகத்தூர் பகுதியில் பரபரப்பு

ஒடுகத்தூர், செப்.22:  அதிகாரிகள் ரெய்டு நடத்த வருவதை அறிந்து கிளினிக்குகளை விட்டு போலி டாக்டர்கள் ஓட்டம் பிடித்ததால் ஒடுகத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ேவலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தங்களின் மருத்துவ சிகிச்சைக்காக ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால், பெரும்பாலானோர் பணத்தை வீண் செலவு செய்து ஒடுகத்தூர் பகுதியில் உள்ள சிறு, சிறு கிளினிக்கை தேடி ஓடுகின்றனர். அவ்வாறு அங்கு சிகிச்சை பார்க்கும் போலி மருத்துவர்கள் 10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் அரை குறையாக ஓமியோபதி முத்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்கிறோம் என்று மக்களின் உயிரோடு விளையாடுகின்றனர்.

இதுபற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தாலும் எந்த பயனும் இல்லாத நிலை இருந்து வந்தது. எனவே, போலி டாக்டர்கள் மீது உரிய எடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்தது. அதன்படி, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் கண்ணகி தலைமையில் டாக்டர் வசந்த் கொண்ட குழுவினர் நேற்று ஒடுகத்தூர் பேரூராட்சியில் திடீர் ஆய்வு செய்தனர். ஆனால் அதிகாரிகள் ரெய்டுக்கு வருவதை முன்கூட்டியே அறிந்த போலி டாக்டர்கள் தாங்கள் நடத்தி வந்த கிளினிக்கை கூட மூடாமல் ‘துண்டைக் காணோம் துணியை காணோம்’ என்று தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த கிளினிக்குகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். அதேபோல், ஒரு சில இடங்களில் முறையான உரிமம் பெறாமல் கிளினிக் நடத்தியவர்களுக்கு விரைவில் உரிமம் பெற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றனர். இதுகுறித்து இணை இயக்குநர் டாக்டர் கண்ணகி கூறுகையில், ‘‘கலெக்டர் உத்தரவின்பேரில் போலி டாக்டர்களை கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் வருவதை அறிந்த அவர்கள் தப்பியோடி தலைமறைவானார்கள். இந்த ஆய்வு மீண்டும் தொடரும்’’ என்றார். ஆய்வின்போது, வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் இன்பரசன் உடனிருந்தார்.

Related Stories: