×

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 13 இடங்களில் மட்டும் அனுமதி கலெக்டர் மேகநாதரெட்டி அறிவிப்பு

விருதுநகர், ஆக. 26: விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை, நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், சதுர்த்தி விழாவில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டும் செய்யப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளின் ஆபரண தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்ற மரங்களின் இயற்கை பிசின் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தொர்மாக்கோல் பொருட்கள் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது விநாயகர் சிலைகள் மின்கம்பிகளை தொடாதவாறு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். மாவட்டத்தில் 13 இடங்களில் சிலைகள் கரைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள்: விருதுநகர் மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வரும் சிலைகள் பைபாஸ் ரோடு கல் கிடங்களிலும், ஆவடையாபுரம் பகுதி சிலைகள் உபயோகமற்ற கிணற்றிலும் கரைக்க வேண்டும். சிவகாசி நகர்புறங்களில் இருந்து வரும் சிலைகள் தெய்வானை நகரில் உள்ள உபயோகமற்ற கிணற்றில் கரைக்க வேண்டும். எம்.புதுப்பட்டி, மாரனேரி ஊர் சிலைகள் மாரனேரி மடவார் வளாகம் கண்மாயிலும், அருப்புக்கோட்டை நகர் பகுதி சிலைகள், பந்தல்குடி சுற்றுப்பகுதி சிலைகள் பந்தல்குடி பெரிய கண்மாயில் கரைக்க வேண்டும்.

ராஜபாளையம் மற்றும் சுற்றுப்புற சிலைகள் ஜெயவிலாஸ் பஸ் கம்பெனி எதிர்புற வடுக ஊருணியில் கரைக்க வேண்டும். அம்மாபட்டி, ஏழாயிரம் பண்ணை, ஆலங்குளம் பகுதி சிலைகள் அப்பகுதியிலுள்ள உபயோகமற்ற கிணறு, தெப்பம், மற்றும் ஆலங்குளம் குவாரியில் கரைக்க வேண்டும். திருவில்லிபுத்தூர் நகர்புற சிலைகள் மடவார் வளாகத்திலும், திருவில்லிபுத்தூர் தாலுகா சிலைகள் திருவண்ணாமலை கோனகிரி குளத்தில், கிருஷ்ணன்கோவில் சிலைகள் ராமச்சந்திராபுரம் கண்மாயில் கரைக்க வேண்டும். குன்னூர் சிலைகள் குன்னூர் கண்மாயிலும், வத்திராயிருப்பு, கூமாபட்டி சிலைகள் மகாராஜபுரம், கூமாபட்டி பெரிய கண்மாயில் கரைக்க வேண்டும் என்றார்.

Tags : Meghanathareddy ,Ganesha ,Virudhunagar district ,
× RELATED திருப்பம் தரும் திருப்புகழ்