×

குளித்தலை வட்டாரத்தில் கிராமப்புறத்தை தேடி வங்கி சேவை

குளித்தலை, ஆக. 26: குளித்தலை வட்டாரத்தில் கிராமப்புற விவசாயிகளை தேடி வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு கூட்டுறவுத்துறை சார்பில் கிராமப்புற விவசாயிகள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வாங்கும் கடன் தொகையை எளிதாக பெற்றுக் கொள்ளவும், மேலும் வங்கி சேவைகளை தங்கள் பகுதிகளிலேயே பெற்று கொள்ள வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் கிராமப்புற விவசாயிகளைத் தேடி வங்கி சேவை தொடங்கப்பட்டது. அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி குளித்தலை கிளை மூலம் வங்கி கணக்கு தொடங்கிய கிராமப்புற விவசாயிகள் பயன்பெறும் வகையில் மைக்ரோ ஏடிஎம் மூலம் பணம் பெறும் வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சேவையை திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் குறைந்தபட்சம் ரூ.500, அதிகபட்சம் ஒரு லட்சம் வரை பணம் பெறும் வசதி. மேலும் அனைத்து அரசு உடைமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களும் வங்கி சேவை வாகனங்கள் வரும்பொழுது அங்கேயே பணம் பெறும் வசதியை பெறலாம். இந்நிலையில் குளித்தலை அடுத்த வைப்புதூர் மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு வங்கி சேவை நேற்று தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி குளித்தலை கிளை மேலாளர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். வங்கி சேவையை வட்டார கள அலுவலர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.இதில் வங்கி மேற்பார்வையாளர்கள் ராமமூர்த்தி உத்தரவுபடி கிளை உதவியாளர் தீபன் ரெட்டி, செயலாளர் புனிதா மற்றும் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kuluthalai ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு