×

அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ திருச்சபைக்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூர்: மாதவரம் பால்பண்ணை அருகே கே.கே.தாழை, அண்ணா தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக பெராக்கா கிறிஸ்தவ திருச்சபை இயங்கி வருகிறது. இக்கட்டிடம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, அக்கட்டிடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ததில், அக்கட்டிடம் முறையான அனுமதியின்றி கூடுதலாக கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் அக்கட்டிடத்துக்கு சீல் வைப்பது குறித்து கிறிஸ்துவ திருச்சபை பாஸ்டர் மரியசிங்கராயரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இதற்கு அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், வழக்கம்போல் இந்த கிறிஸ்தவ திருச்சபையில் ஏராளமான மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை கிறிஸ்தவ திருச்சபை கட்டிடத்துக்கு மாதவரம் மண்டல உதவி ஆணையர் முருகன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். பின்னர் உரிய அனுமதியின்றி கிறிஸ்தவ திருச்சபை கட்டிடம் கட்டப்பட்டு இருப்பதாகவும், தமிழ்நாடு நகர்ப்புற வீட்டுவசதி வாரியத்தின் உத்தரவுபேரில் அக்கட்டிடத்துக்கு சீல் வைக்கப் போவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்களை வெளியேற்றி, அந்த கிறிஸ்தவ திருச்சபை கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அங்கு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Christian ,
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்