×

ராமாபுரத்தில் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்ககோரி தொடர் முழக்க போராட்டம்

பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  வசிக்கின்றனர். தமிழக அரசு சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ராமாபுரம், திருமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்புநிலங்கள் எனக்கூறி அப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற பெருநகர சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்ட வந்தனர். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திருமலை நகர் பகுதி மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தொடர் முழுக்கப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கையில் பதாகைகளை ஏந்தியும், கண்டன கோஷங்களை எழுப்பியும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குடிமனை பட்டா வழங்க கோரியும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் எங்களுக்கு நிலவகை மாற்றம் செய்து குடி மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டார். இப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags : Ramapuram ,
× RELATED சோளிங்கர் அருகே 20 ஆண்டு பிரச்னைக்கு...