×

கோட்டூரில் பள்ளியின் கடைசி நாளில் மாணவர்களுக்கு பிரியாணி விருந்து படைத்து அசத்திய ஆசிரியர்கள்

மன்னார்குடி, மே 14: கொரோனா தொற்றால் கடந்த இரண்டு வருடங்களில் ஆண்டுத்தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வுகளை எதிர் கொண்டு எழுதினர். 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (மே 14) முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி கடைசி நாளான நேற்று கோட்டூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கும்மட்டித் திடல் அரசு நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழை இலையில் பிரியாணி விருந்து அளித்து தங்கள் பிரியங்களை பகிர்ந்து கொண்டனர். இதுகுறித்து நம்மிடம் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணன் கூறியது : கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்றால் பள்ளியின் இறுதி நாளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அமுது படைக்கும் நிகழ்வு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் போனது. எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்து, அந்த துயரத்தை, ஏக்கத்தை தீர்த்துக் கொண்டோம் என்று கூறினார்.ஆசிரியர், மாணவர்கள் உறவு சிதைந்திருப்பதாக சமூக அக்கறையாளர்களும், கல்வியாளர்களும் கவலை கொண்டுள்ள நிலையில் இது போன்ற விருந்து பறிமாறல்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் உறவை மேலும் பலப்படுத்தட்டும், மாணவர்களின் கல்வி நிலையை வளப்படுத்தட்டும்.

Tags : Kottur ,
× RELATED குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி