×

ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

தண்டையார்பேட்டை: கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக  மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்ததால் மீண்டும் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்புகளை பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாதவரம் அடுத்த கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி மகாத்மா (55). இவரது மனைவி லதா, இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளார். கடந்த 24ம் தேதி இரவு 10.30 மணியளவில் வீட்டின் படியில் ஏறும்போது மகாத்மா நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை 7.50 மணி அளவில் மகாத்மா மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, அவரது உறவினர்களின் முழு சம்மதத்துடன் மகாத்மா உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல், தோல் என மொத்தம் 6 உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டன. அரசு விதிமுறைப்படி பதிவு செய்து காத்திருக்கும் தேவையான நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன. அதில், தனியார் மருத்துவமனைக்கு 3 உடல் உறுப்புகளும், மீதமுள்ள உடல் உறுப்புகள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு விதி முறைப்படி பதிவு செய்து காத்திருக்கும் நோயாளிகளுக்கும் தானமாக வழங்கப்பட்டு நேற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சை ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர், துறை பேராசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர்  தலைமையில் வெற்றிகரமாக நடந்தது.

Tags : Stanley Hospital ,
× RELATED மணலி நெடுஞ்சாலையில் நேற்று மாநகர...