×

கடலூர் சில்வர் பீச்சை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றி அமைக்க வேண்டும்

கடலூர், ஏப். 21: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தில் கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ பேசியதாவது: கடலூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி, பண்ருட்டி மற்றும் புதுவை என அனைத்துப் பகுதியினரும் செல்லக்கூடிய கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் சென்னை மெரினா பீச்சுக்கு அடுத்து, அதிக மணற்பரப்பை கொண்ட அழகிய பகுதி. அங்கே சிறுவர் பூங்கா, நிழற்குடைகள், நடையயிற்சி மேற்கொள்ளக்கூடிய நடைபாதைகள், உணவகத்துடன்கூடிய தங்கும் விடுதிகள், உயர்மின் கோபுர விளக்குகள் போன்ற பல்வேறு வசதிகளை செய்து தந்து, சிறந்த சுற்றுத்தலமாக மாற்றி அமைத்திட கேட்டுக்கொள்கிறேன்.

சுற்றுலாத்துறை அமைச்சர் பா.மதிவேந்தன்: கடலூர் நகராட்சி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சில்வர் பீச் பகுதி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதிகளில் சிறுவர் பூங்கா, நிழற்குடைகள், அமரும் இருக்கைகள், குளியலறை மற்றும் கழிப்பறை போன்ற வசதிகளை ஏற்படுத்த கடலூர் மாநகராட்சியிடமிருந்து கருத்துரு கோரப்பட்டுள்ளது. கருத்துரு பெறப்பட்டவுடன் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆய்வுசெய்து துறையின் நிதி நிலைக்கு ஏற்ப கடலூர் மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.ஐயப்பன் எம்எல்ஏ: எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்துகூட தொகை ஒதுக்க செய்தால், அதையும் நான் சில்வர் பீச் சுற்றுலா தளத்திற்கு ஒதுக்கித்தர தயாராக இருக்கிறேன். ஆகையால், இந்த வருடமே அந்த பணியை மேற்கொண்டு, திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, கடலூர் சில்வர் பீச்சை சுற்றுலாத்தலமாக மாற்றி அமைக்க கேட்டுக்கொள்கிறேன்.   

Tags : Cuddalore Silver Beach ,
× RELATED கடலூர் வெள்ளி கடற்கரையில் தூய்மை பணி