×

அகில இந்திய ரயில்வே சம்மேளன புதிய தலைவராக என்.கண்ணையா தேர்வு

பீளமேடு, ஏப்.20:  அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் 97-வது பொது மகாசபை கூட்டம் கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினியில் நடந்தது. இதில் அகில இந்திய தலைவராக டாக்டர் என்.கண்ணையா 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலிலும் இவர் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ரயில்வே தொழிற்சங்க தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய ரயில்வே சம்மேளனம் என்பது கொங்கண் ரயில்வே உள்பட 19 ரயில்வேக்களையும், சென்னையில் உள்ள ஐ.சி.எப். உள்ளிட்ட 7 உற்பத்தி கேந்திரங்களையும் உள்ளடக்கியது. 12 லட்சம் ரயில்வே தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனமாக இது உள்ளது. அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக இதற்கு முன்பு புகழ் பெற்ற மக்கள் நாயகர் என்று அழைக்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயணன், முன்னாள் குடியரசு தலைவர் வி.வி.கிரி, முன்னாள் ரயில்வே அமைச்சர்கள் மது தண்டவதே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், முன்னாள் மேற்கு வங்காள முதலமைச்சர் ஜோதிபாசு ஆகியோர் பல்வேறு கால கட்டங்களில் தலைவர்களாக இருந்துள்ளனர். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட செயலாளரும், அகில இந்திய ரயில்வே சம்மேளன செயற்குழு உறுப்பினருமான எம்.கோவிந்தன் தெரிவித்துள்ளார்.

Tags : N. Kannaiya ,President ,All India Railway Federation ,
× RELATED ஏ.ஐ.ஆர்.எஃப். தலைவராக என்.கண்ணையா மீண்டும் தேர்வு