×

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும்: பேரவையில் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.சேகர் பேசுகையில், ‘பெரம்பூர் தொகுதி தொழிலாளர், ஏழை எளிய மக்கள் வசிக்கின்ற பகுதி. இங்கிருக்கும் மாணவர்கள் வெளியூர் சென்று தொழிற்பயிற்சி படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, பெரம்பூரில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும்,’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், ‘சென்னை மாவட்டத்தில் 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 19 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இங்குள்ள 6666 இருக்கைகளில், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத இடங்களை அரசு ஓதுக்கீட்டின் கீழ் மொத்தம் 3849 இருக்கைகள் காலியாக உள்ளன. இருக்கைகள் போதுமானதாக உள்ளதால், பெரம்பூர் தொகுதியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பது குறித்து அரசின் பரிசீலனையில் இல்லை,’ என்றார்.

ஆர்.டி.சேகர்:  பெரம்பூர் தொகுதியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த அரசு முன்வர வேண்டும்.

அமைச்சர் சி.வி.கணேசன்: இதுவரை 56 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 69,010 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வேலை வாய்ப்பு முகாம் நடத்தினால் 25,000க்கும் குறைவான இளைஞர்கள் வருகின்றனர். ஒட்டன்சத்திரத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 50,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 5000க்கும் அதிகமாக வேலை வாயப்பை தர இருக்கிறோம். தொடர்ந்து தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். பெரம்பூரிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Perambur Assembly ,RD Sehgar ,MLA ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...