×

ராசிபுரம் அரசு பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

நாமக்கல், ஏப்.12: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான
சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள், 15 வட்டாரங்களிலும் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் பிறந்தது முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு கண், காது, மூக்கு, தொண்டை, முடநீக்கியல், மற்றும் மனநல மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், இன்று (12ம் தேதி) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதற்காக பிறந்தது முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் குறைபாடு, உடல் ரீதியான மற்றும் மன அளவிலான பிரச்னைகள் உள்ள குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. தலை, முகம், கண், வாய், அன்னப்பிளவு, கழுத்து குட்டையாக இருப்பது, எலும்பு வளைந்து இருத்தல் போன்றவை குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, பள்ளியில் சேர்த்து பயிற்சி அளித்தல், தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் வழங்குதல், கடுமையாக பாதித்த குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீட்டிலேயே பயிற்சி, பள்ளி செல்லா மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு முகாம்களில் பயிற்சி, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஆதார வளமையத்தில் பயிற்சி அளித்தல், விளையாட்டுடன் கூடிய கல்வி, பிசியோதெரபி சிகிச்சை, பேச்சு பயிற்சி, சிறப்பு கல்வி ஆகியவை அளிக்கப்படுகிறது. மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். தேவைப்படும் குழந்தைகளுக்கு இயன்முறை சிகிச்சை மூலம், இயல்பு நிலைக்கு திரும்பும் பயிற்சிகளும் அளிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Rasipuram Government School ,
× RELATED ராசிபுரம் அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா