×

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி 135 தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈரோடு,டிச.26: ஈரோடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று 135 தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. உலகம் முழுவதும் ஏசு கிறிஸ்து பிறந்த தினமான டிச.,25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகையான நேற்று கிறிஸ்தவர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். டிசம்பர் மாத துவக்கம் முதல் தங்களது வீடுகளுக்கு முன்பு ஸ்டார்களை தொங்கவிட்டிருந்தனர். இந்நிலையில் ஏசு கிறிஸ்து பிறப்பினையொட்டி நேற்றுமுன்தினம் நள்ளிரவில் மாவட்டத்தில் உள்ள 135 தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதில், ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஆலயத்தின் பங்கு தந்தை ஜான்சேவியர் குழந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதைத்தொடர்ந்து ஏசு கிறிஸ்துவின் பிறப்புக்கான நிகழ்வு நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. குழந்தை ஏசுகிறிஸ்துவின் சொரூபம் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடிலில் வைக்கப்பட்டு இருந்த குழந்தை ஏசுவை பார்வையிட்டு வழிபட்டு சென்றனர்.

இதேபோல், ஈரோடு ரயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய யூதா ததேயு தலைமையில் நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஈரோடு சிஎஸ்ஐ பிரப் தேவாலயத்தில் நேற்று அதிகாலை 5 மணி முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த வழிபாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என மாவட்டம் முழுவதும் உள்ள 135 கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி நேற்று சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.

கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
பவானி: பவானி  சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நேற்று அதிகாலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை ஆயர் சாமுவேல்  பிரபாகரன் தலைமையில் நடத்தப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை  காரணமாக சமூக இடைவெளியுடன் அமர்ந்து பிரார்த்தனையில் பங்கேற்க  அனுமதிக்கப்பட்டனர்.

இதில், புத்தாடை அணிந்து குடும்பம், குடும்பமாக வந்த  கிறிஸ்துவர்கள் உற்சாகமாய் பங்கேற்றனர். மேலும், அண்ணா நகர் பவானி அன்னை ஆலயம், தேவபுரம் அகில இந்திய தேவசபை மற்றும் ஊராட்சிக்கோட்டை, அம்மாபேட்டை,  பூதப்பாடி, சிங்கம்பேட்டை பகுதியில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ்  ஆராதனை நடைபெற்றது.

Tags : Christmas Eve ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி விமான கட்டணம் பல மடங்கு உயர்வு: மக்கள் அவதி