வைகுண்டம், மார்ச் 23: வைகுண்டம் அருகே புதுக்குடியில் பல்லாண்டுகளாக பயன்பாட்டில் இருந்துவந்த ரயில்வே வழித்தடம் திடீரென தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரயில்கள் ஆழ்வார்திருநகரி வழியாக புதுக்குடியில் உள்ள வைகுண்டம் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். ஆழ்வார்திருநகரியில் இருந்து ரயில் தண்டவாளம் ஆதிநாதபுரம், நவலட்சுமிபுரம், புதுக்குடி வழியாக பயன்பாட்டில் உள்ளது. தண்டவாளத்தின் ஒருபுறம் குடியிருப்பு பகுதிகளும் மறுபுறம் விவசாய பகுதிகளும் உள்ளன. புதுக்குடி, ஆதிநாதபுரம், நவ லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி நடந்து வருகிறது.
நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழைத்தார்கள் புதுக்குடியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள சாலை வழியாக கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வந்தநிலையில் புதுக்குடி ரயில்வே தண்டவாளம் அருகே வழித்தடப்பாதை ரயில்வே நிர்வாகத்தால் திடீரென தடுப்பு அமைத்து அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே அப்பாதையை பயன்படுத்தி வந்த விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக வாழைத்தார்களை கொண்டுசெல்ல வழியில்லாமல் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், விவசாய சங்க பொறுப்பாளர் கணபதி, திமுக நகர துணைச்செயலாளர் ஜெயபால், சமூக ஆர்வலர் புதுக்குடி குமார் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் ரயில்வே நிர்வாகத்தால் புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பை பார்வையிட்ட பிறகு இதை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர் இதுகுறித்து திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலமுருகன் கூறுகையில் ‘‘ இதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வைகுண்டம் பேரூராட்சி தலைவர் சிநேகவள்ளி ஆகியோர் மூலம் கனிமொழி எம்.பி.யின் கவனத்திற்கு கொண்டுசென்று புதிதாக ரயில்வே நிர்வாகத்தில் அமைக்கப்பட்ட வழித்தட தடுப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.