×

திருநின்றவூர் நகராட்சியில் சாலை குடிநீர் வசதி செய்ய நடவடிக்கை: தலைவர் உஷாராணி ரவி தகவல்

ஆவடி: திருநின்றவூர் நகராட்சியில் கவுன்சிலர்களின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. நகரமன்ற தலைவர் உஷாராணிரவி (திமுக) தலைமை வகித்தார். துணைத் தலைவர் சரளா நாகராஜ், நகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தெருவிளக்கு சீரமைப்பு, குடிநீர், சாலை, மழைநீர் கால்வாய்கள் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். தலைவர் உஷாராணிரவி பதிலளித்துப் பேசுகையில், ‘‘பழுதான தெருவிளக்குகள், குடிநீர் பிரச்னைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மற்ற அடிப்படை வசதிகளுக்கு நிதிஆதாரம் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வழிகாட்டு முறைகள் பரிசீலனை செய்யப்பட்டது. மேலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அலுவலகத்திற்கு தேவையாக கட்டிட வசதிகள் போதுமான அளவு இல்லை. தற்போது நகராட்சி வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்களையும், வாடகைக்கு விடப்பட்டு உள்ள 6 கடைகள் அனைத்தையும் நகராட்சி மேம்பாட்டிற்கு புனரமைத்து தேவையான பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.  

கவுன்சிலர்கள் தி.வை.ரவி, தங்கராஜ், சரவணன், பாலாஜி, ராஜேஸ்வரி, தேவியோகா, ராதா, உஷாராணி, சாந்தி, ஸ்ரீதேவி, டி.ஜெ.விசுவநாதன், கமலக்கண்ணன், கிருஷ்ணன், திலகாபாபு, அன்பழகன், சுரேஷ்குமார், சசிகலா, ஜெயக்குமார், கோமதிஸ்டீபன், விஜயா, கரிகாலன், மைதிலி உடப்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruninravur Municipality ,Usharani Ravi ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் சாலை...