×

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சிவலிங்கம் வைத்து பூஜை

திருப்பூர்,மார்ச் 4:காங்கயம் அருகே  உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயங்கள், சிவலிங்கம் வைத்து பூஜிக்கப்படுகிறது. காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி  கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில், சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோயில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் சுவாமியிடம் பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.

இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம் என்பது ஐதீகம்.

இந்நிலையில் காங்கயம்  முத்தூர் அருகே வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் உத்தரவான கண்ணாடி குவளையில் உப்பு, நீர்,நாணயங்கள்,சிவலிங்கம் ஆகிய பொருட்கள் நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.  இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் திருநீறு, மஞ்சள், குங்குமம் ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Sivanmalai ,Subramaniasamy ,Temple ,Lord ,Shivalingam ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் காவலர் குண்டு பாய்ந்து பலி