×

மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் பென்னாகரம் பேரூராட்சியில் வெற்றி மகுடம் சூடுவது யார்?

பென்னாகரம், பிப். 17: தர்மபுரி மாவட்டத்தில் கவனம் ஈர்க்கும் பேரூராட்சிகளில் ஒன்றாக இருப்பது பென்னாகரம் பேரூராட்சி. பொன்னார் மகாராஜா ஒரு காலத்தில் ஆட்சி ெசய்த பகுதி. அவரது பெயரில் பொன்னார்நகரம், பொன்னகரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டு தற்போது பென்னாகரமாக மாறி நிற்கிறது என்பது ஊருக்கான பெயர்க்காரணம். விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்த பேரூராட்சி மலைப்பகுதிகள் நிறைந்த வனச்சரகமாகவும் திகழ்கிறது. அதேநேரத்தில் காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வங்கிகள் என அனைத்தும் உள்ளது சிறப்பு.

ஊராட்சியாக இருந்த பென்னாகரம் கடந்த 14.10.1970ம் ஆண்டு, முதல் நிலை பேரூராட்சியாக  தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 14.02.1985ம் ஆண்டு தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 6.75 சதுர கிலோமீட்டர். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது.பென்னாகரம் பேரூராட்சியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு, அதிமுகவை சேர்ந்த சுப்பிரமணி  பேரூராட்சி தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 ஆண்டுகள் பதவி வைத்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் போனது. இந்த நிலையில் வரும் 19ம் தேதி நடக்கும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க ஆயத்தமாக உள்ளது பென்னாகரம் பேரூராட்சி.

ஆண்வாக்காளர்-10,216பேர், பெண்வாக்காளர்-9,677பேர் என்று மொத்தம் 19,893 வாக்காளர்கள் உள்ளனர். 18 வார்டுகளில் திமுக 13 வார்டுகளில்  திமுக போட்டியிடுகிறது. அதிமுக 18, பாமக 13, பாஜக 7, தேமுதிக 6, சிபிஎம் 4, மக்கள் நீதி மையம் 2, விசிக 1, அம்மா முன்னேற்றக் கழகம் 1, சுயேட்சைகள்  10 என்று  மொத்தம் 75 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் கவுன்சிலராக வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்? அவர்களால் தேர்வு செய்யப்படும் தலைவர் யார்? துணை தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து பென்னாகரம் பேரூராட்சி பொதுமக்கள் கூறுகையில், ‘‘பென்னாகரம் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. திமுக ஆட்சியில் கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அனைத்து வார்டுகளுக்கும் கிடைக்கவில்லை. குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தரமற்ற சாலைகளே தென்படுகிறது.  பல வார்டுகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தை  இடித்துவிட்டனர். ஆனால் மாற்றான  கட்டுமான பணியால் மக்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் உள்ளது. ஆனால் போதிய மருத்துவர்கள் இல்லாததால் மக்கள், உரிய நேரத்தில் சிகிச்சை பெறாத நிலையே தொடர்கிறது. இந்தியாவின் பிரசித்தி பெற்ற ஒகேனக்கல் அருவி, இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆனால் அதற்கு அருகாமையில் இருக்கும் பென்னாகரம் பேரூராட்சி, அடிப்படை கட்டமைப்புகள் உயர்த்தப்படாமல் இன்றுவரை ஊராட்சி போலவே இருப்பது வேதனைக்குரியது. இதனை கருத்தில் கொண்டு மக்கள் பணியாற்றும் வேட்பாளர்களை கவுன்சிலராக தேர்வு செய்ய வாக்களிப்போம். அவர்களால் தேர்வு பெறும் தலைவரும், துணைத் தலைவரும் மக்கள் பிரச்னைகளை தீர்த்து,  நிர்வாகத்தையும் திறம்பட நடத்துவார்கள் என்று நம்புகிறோம்,’’  என்றனர்.

Tags : Pennagaram ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...