×

ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து: கர்நாடகாவில் குடிநீருக்காக திறந்துவிட்டது தவறி வந்திரிச்சாம்

பென்னாகரம்: கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பெங்களூருவில் உள்ள சிவா அணைக்கட்டுக்கு, தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 2,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து, கடந்த 3 மாதங்களாக மிக குறைந்த அளவிலேயே இருந்தது. இந்தநிலையில், கடந்த 17 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 200 கனஅடியாக நீடித்து வந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீரின்றி வறண்டு, பாறைகளாக தென்பட்டன.

இந்நிலையில் குடிநீர் தேவைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிவா அணைக்கட்டுக்கு, கேஆர்எஸ் அணையில் இருந்து நேற்று முன்தினம் 4 மணி நேரம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சிவா அணைக்கட்டை கடந்து, தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவுக்கு நேற்று காலை திடீரென வந்தது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,500 கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் மிதமாக கொட்டியது.

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி ஒக்கேனக்கலுக்கு விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 55 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 67 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று முன்தினம் 62.49 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 62.36 அடியானது. நீர் இருப்பு 26.47 டிஎம்சியாக உள்ளது.

 

The post ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து: கர்நாடகாவில் குடிநீருக்காக திறந்துவிட்டது தவறி வந்திரிச்சாம் appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Karnataka ,Pennagaram ,Okanagan Cauvery ,KRS Dam ,Siva Dam ,Bengaluru ,Tamil Nadu-Karnataka ,Pilikundulu ,Okenakal ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி