×

காட்பாடி அருகே வீட்டில் பதுக்கிய விவகாரம் பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை பாகங்களை மீட்க விருதாச்சலத்தில் போலீசார் முகாம் சிலையின் பழமையை கண்டறிய ஆய்வுக்கு நடவடிக்கை

திருவலம், பிப்.3: காட்பாடி அருகே வீட்டில் பதுக்கிய பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை மீட்கப்பட்ட விவகாரத்தில், சிலையின் உடைந்த பாகங்களை மீட்க விருதாச்சலத்தில் போலீசார் முகாமிட்டுள்ளனர். மேலும் சிலையின் பழமையை கண்டறிய ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவுக்குட்பட்ட திருவலம் அடுத்த 55 புத்தூர் கிராமத்தில், அம்பேத்கர் நகரில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை பதுக்கி வைத்திருப்பதாக காட்பாடி சிறப்பு தனிப்படை போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை எஸ்ஐ ராஜசேகர் மற்றும் போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, கூலித்தொழிலாளியான பிரேம்குமார்(21) என்பவர் வீட்டில் இடது கை, வலது கால் பகுதி உடைந்து சேதமடைந்த 2அடி உயரமுள்ள 68 கிலோ ஐம்பொன்னாலான பழங்கால அம்மன் சிலை மீட்கப்பட்டது.

தொடர்ந்து பிரேம்குமாரை கைது செய்து திருவலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் பழங்கால சிலை பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்டமாக நடத்திய விசாரணையில், ‘கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏரியில் மண்ணில் புதைந்து இருந்த சிலையை வீட்டிற்கு கொண்டு வந்தேன். சிலையின் உடைந்த பாகங்களை எனது தாய்மாமாவான குமார் என்பவர் அவரது சொந்த ஊரான விருதாச்சலத்துக்கு கொண்டு சென்றுள்ளார்’ என்று பிரேம்குமார் தெரிவித்தார். ஆனால் சிலை மண்ணில் புதைந்திருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. இதன் மூலம் சிலை கடத்தி வரப்பட்டிருப்பதை உறுதி செய்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் நேற்று முன்தினம் இரவு திருவலம் காவல்நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் சிலையின் கை, கால் பாகங்களை கொண்டு வரும்படி குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். ஆனால் விருதாச்சலத்துக்கு சென்ற குமார் இதுவரை சிலையின் பாகங்களை கொண்டுவரவில்லை. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் வேலூர் மாவட்ட போலீசாரும் விருதாச்சலத்துக்கு சென்று குமாரை பிடிக்க நேற்று முதல் முகாமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து திருவலம் போலீசார் வழக்குப்பதிந்து பிரேம்குமாரை கைது செய்து, குடியாத்தம் கிளை சிறையில் அடைத்தனர். அதோடு மீட்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது குறித்து ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோயில்களில் மாயமான சிலைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vriddhachalam ,Goddess ,Katpadi ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது