எலச்சிப்பாளையத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிப்பாளையம் ஒன்றியம், 85.கவுண்டம்பாளையம், குப்பாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, எலச்சிப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு சரிபார்த்தார். பின்னர், 85.கவுண்டம்பாளையம் ஊராட்சி பள்ளிப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் கரை மேம்பாடு செய்யும் பணி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாளர்களால் மேற்கொள்ளப்படுவதையும், ஓம் சக்தி நகர் அருந்ததியர் காலனியில், 14வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ₹5.87 லட்சம் மதிப்பில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளதை கலெக்டர்  ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, குப்பாண்டம்பாளையம் ஊராட்சி, ஆன்றாபட்டி கிராமத்தில் ₹5.25 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதையும், ஒடுவம்பாளைத்தில் ₹1.97 லட்சம் மதிப்பீட்டில் தனியார் நிலத்தில் பண்ணைக் குட்டை அமைக்கப்பட்டு வரும் பணியினையும், ₹12.19 லட்சம் மதிப்பீட்டில் குப்பாண்டம்பாளையம் ஊராட்சி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் புதியதாக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், எலச்சிப்பாளையம் பிடிஓக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: