×

கடத்தல் நகையை ஒப்படைக்காததால் கடலூர் வாலிபர் ஆட்டோவில் கடத்தல் திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

திருச்சி, ஜன. 28: கடத்தல் நகையை ஒப்படைக்காததால் கடலூரை சேர்ந்த வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. துபாயிலிருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் நேற்றுமுன்தினம் வந்தது. அந்த விமானத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி இடைசெருகல் நடுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வகுமார் (32) என்பவர் வந்தார். அவரை வரவேற்று அழைத்து செல்வதற்காக அவரது மனைவி சுகன்யா விமான நிலையம் முன் காத்திருந்தார். அதிகாரிகள் சோதனைக்கு பின் செல்வகுமார் வெளியே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 54வயது மதித்தக்கதக்க ஆசாமி, செல்வகுமாரை மடக்கி துபாயில் இருந்து ஏஜென்ட் கொடுத்து அனுப்பிய 150 கிராம் தங்க செயினை கொடு என கேட்டுள்ளார். ஆனால் அவர், தன்னிடம் செயின் இல்லை. கழிவறையில் போட்டு விட்டு வந்து விட்டேன் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமி, அவரை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுகன்யா, ஆட்டோவை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக ஏர்போர்ட் போலீசில் சுகன்யா புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆட்டோவில் கடத்தப்பட்ட செல்வகுமாரை விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரையும், அவரை கடத்தி சென்ற ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் (54) என்பவரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், வெளிநாட்டில் தங்கத்தின் மதிப்பு 24 கேரட் என்பதால் இந்த நகைகளை இந்தியாவில் அதிக விலைக்கு வியாபாரிகள் வாங்குவது வழக்கம்.

துபாயில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட செல்வகுமாரிடம் 150 கிராம் எடையுள்ள செயினை கொடுத்து, திருச்சியில் நகை புரோக்கர் இப்ராஹிம் என்பவரிடம் ஒப்படைக்கும்படி கூறியுள்ளனர். நகையை வாங்கிய செல்வகுமார், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கி வெளியே செல்லும் போது, இப்ராஹிம் மறித்து கேட்ட போது நகை இல்லை என கூறியுள்ளார். துபாயில் நகைளை கொடுத்து அனுப்பியவர், செல்வகுமாரை போட்டோ எடுத்து அதனை வாட்ஸ் அப் மூலம் இப்ராஹிமுக்கு அனுப்பி வைத்தார். அதன்மூலம் செல்வகுமாரை கண்டறிந்து கேட்ட போது, மாயமானதாக கூறியதால் செல்வகுமார் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதில் செயின் மாயமானதாக கூறிய ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை எங்கே என்றும் கழிவறையில் தான் செல்வகுமார் போட்டு விட்டு வந்தாரா அல்லது இவரே பதுக்கி விட்டாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Cuddalore Valipar ,Trichy airport ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்