சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி விக்கிரவாண்டி அருகே பரிதாபம்

விக்கிரவாண்டி, ஜன.21: விக்கிரவாண்டி அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்த விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த எசாலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ராஜவேல் (35) விழுப்புரத்திலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு லலிதா (29) என்ற மனைவியும், ரோகித் (3) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜவேலு பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அன்று இரவு 9.30 மணியளவில் அவரது மனைவி போனில் பேசியபோது வீடு திரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கணவர் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த மனைவி லலிதா உறவினர்கள் உதவியுடன் பல பகுதிகளில் தேடினார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சின்னதச்சூர் அரசு பள்ளி எதிரே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து அங்கிருந்த சேற்றில் சிக்கி ராஜவேல் இறந்து கிடந்தார். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.

 விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராஜவேல் உடலைப்பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Related Stories: